கள்ளக்குறிச்சியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் பிசாந்த் பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தார். இதில் ரத்த சோகை, இணை உணவின் அவசியம், குழந்தைகளின் எடை உயரம் எடுத்தலின் அவசியம், சரிவிகித உணவின் அவசியம், கை கழுவுதலின் அவசியம், ஆரோக்கிய வாழ்விற்கு யோகா, ஆயுர்வேதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.