கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையிலான ரயில் பாதையில் அகஸ்தீஸ்வரம் - கொட்டாரம் சாலையில் ரயில்வே கேட் அமைந்து உள்ளது. இது மிக முக்கியமான சாலையாக விளங்குவதால் இப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே பல்வேறு தரப்பி னர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் தற்போது இங்கு சுரங்கப் பாதை அமைப்பதற்கான ஆய்வு பணிகள் தொடங்கி இருக்கிறது. முதற்கட்ட மாக ரயில்வே - பொறியியல் குழு மற்றும் - பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை குழுவினர் இந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.அப்போது அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவர் அன்பரசி உள்பட உள்ளூர் பிரமுகர்களும் உடன் இருந்தனர். சுரங்கப்பாதை 90 மீட்டர் நீளம், 8 மீட்டர் அகலம், 5 மீட்டர் உயரத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக திட்ட மதிப்பீடு விரைவில் தயாரிக்கப்பட்டு ரயில்வே ஒப்புதலுடன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.