ஆலோசனைக்கூட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, வங்கிகளில் நடக்கும் பணப்பரிமாற்றம் தொடர்பான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என வங்கி மேலாளர்களுடனான ஆலோசனைக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில், வங்கி மேலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மனிஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் மனிஷ் கூறியதாவது : இதில், வங்கிகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் எடுப்போர் விபரங்களை, தினமும் தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். ரொக்கமாக அதிகளவில் பணம் எடுப்போர் பற்றிய விபரங்களையும் தெரிவிக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய நபராக இருந்தால், அவருடைய கணக்குகளை கண்காணிக்க வேண்டும். வங்கிகளில் இருந்து ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுத்து செல்வதை, தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அப்போது, உரிய ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும். அவ்வாறு செய்தால், அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்வதை தவிர்க்க முடியும். இதில், பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த மேலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.