கொலை

3 நாட்களாக பின் தொடர்ந்து சென்று வெட்டி சாய்த்தனர் போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்;

Update: 2025-03-21 07:49 GMT
சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜான் (30). மனைவி சரண்யாவுடன் திருப்பூரில் வசித்து வருகிறார்.ஜான் மீது கொலை,வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.இந்நிலையில் அண்மையில் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ஜான்,தினமும் காலை சேலம் அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.அதேபோல நேற்று தனது மனைவி சரண்யாவுடன் காரில் சேலத்திற்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு மீண்டும் திருப்பூர் சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து இரண்டு கார்களில் 10 பேர் கொண்ட கும்பல் சென்றுள்ளது. ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே நெடுஞ்சாலையில் மனைவியுடன் சென்றுகொண்டிருந்த ரவுடி ஜான் கார் மீது பின்னால் வந்த கார் மோதியுள்ளது.அப்போது விபத்து ஏற்படுத்திய காரில் இருந்து வெளியேறிய 4 பேர் கும்பல் ஜானை காரில் வைத்தே சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது.இதனை தடுக்க சென்ற மனைவி சரண்யாவிற்கும் அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தகவல் அறிந்து வந்த சித்தோடு போலீசார் அங்கிருந்து கையில் ரத்த காயத்துடன் ஊர்மக்கள் பிடித்து வைத்திருந்த கார்த்திகேயனை கைது செய்து அவர் அளித்த தகவலின் பேரில் காரை பின்தொடர்ந்தது சென்றபோது, கொலையாளிகள் சென்ற கார் நின்றுவிட காரில் இருந்த சதீஷ், சரவணன் மற்றும் பூபாலன் ஆகியோர் காட்டு பகுதியில் தப்பியோடியுள்ளனர்.அப்போது சித்தோடு இன்ஸ்பெக்டர் ரவி தனது கைத்துப்பாக்கி மூலம் வானத்தில் மூன்று முறை சுட்டு எச்சரித்துள்ளார்.பின்னர் மூவரும் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் காவலர் யோகராஜை அரிவாளால் வெட்டியுள்ளனர்.இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி தற்காப்பிற்காக மூவரின் காலில் சுட்டு பிடித்து பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சித்தோடு போலீசார் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இந்த கொலை தொடர்பாக பரபரப்பு தகவல்களும் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறும்போது, சேலத்தில் பிரபல ரவுடியாக செல்லதுரை என்பவர் இருந்துள்ளார். கொலையான ஜானும் செல்லதுரையும் இணைந்து கொலை,வழிப்பறி,அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.இந்நிலையில் செல்லதுரையை கொலை செய்ய திட்டமிட்ட ஜான் வெளியூரில் இருந்து ரவுடிகளை அழைத்து வந்த கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்லதுரையை‌ கொலை செய்துள்ளார். சம்பவத்தன்று,ரவுடி செல்லதுரை சென்றுகொண்டிருந்த காரின் மீது இரண்டு கார்களை மோதவிட்டு நிறுத்தியுள்ளனர்.பின்னர் காரில் இருந்து இறங்கிய ரவுடி கும்பல் செல்லதுரையை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது.இதற்கு பழி தீர்க்க ரவுடி செல்லதுரையின் தம்பி ஜீவகன் முடிவெடுத்துள்ளார்.இதற்காக கடந்த 2020ம் ஆண்டு முதல் காத்திருந்த ஜீவகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜானை கொலை செய்ய முடிவு செய்து கடந்த திங்கள்கிழமை முதல் சேலத்தில் இருந்து ஜானை பின் தொடர்ந்து வந்துள்ளனர். திங்கள்கிழமை ஜானை கொலை செய்யும் முயற்சி தோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் கொலை கும்பல் ஜானை பின் தொடர்ந்து சென்றுள்ளது. அன்றும் அந்த கும்பலால் ஜானை கொலை செய்ய முடியவில்லை. இதனால் நேற்று திங்கட்கிழமை 3-வது நாளாக கொலை கும்பல் ஜானை பின் தொடர்ந்து உள்ளது. அதன்படி,சேலத்தில் இருந்து ஜீவகன் தனது கூட்டாளிகளுடன் இரண்டு கார்களில் ரவுடி ஜானின் காரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.சங்ககிரி சுங்கச்சாவடி அருகே ஜானை கொலை செய்ய ஜீவகன் கும்பல் முடிவு செய்து அதன்படி பின் தொடர்ந்து சென்றனர். ஆனால் சங்ககிரி சுங்க சாவடி அருகே அவர்கள் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இரண்டு நாட்களாக கொலை செய்யமுடியாமல் போனதால் இம்முறை கட்டாயம் கொலை செய்ய ஜான் காரை பின் தொடர்ந்தே ஈரோடு மாவட்டம் நசியனூரில் காரில் மோதி விபத்து ஏற்படுத்தி கொலை செய்துள்ளனர்‌.இதில் கார்த்திகேயன் சிக்கிக்கொள்ள மற்றவர்கள் இரண்டு கார்களில் தப்பிச் சென்றுள்ளனர்.ஒரு காரில் இருந்த மூவரை சுட்டுபிடித்ததாகவும் மற்ற காரில் சென்ற 6 நபர்கள் தப்பி சென்றுள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர். இதற்கிடையே கொலையான ஜானின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்றே ஜானின் உறவினர்கள் திரண்டு வந்து கொலையாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும் என ஆவேசமாக கூறிவந்தனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். இந்நிலையில் இன்று ஜானின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட சதீஷ், சரவணன், பூபாலன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய நான்கு பேரும் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜானை கொன்று தப்பி ஓடிய மேலும் 6 பேர் கொண்ட கும்பலை பிடிக்க பவானி, பெருந்துறை, ஈரோடு டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் சேலத்தில் பதுங்கி இருப்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த பார்த்திபன், அழகரசன், பெரியசாமி, சிவகுமார், சேது வாசன் ஆகிய 5 பேரை பிடித்து சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜீவகன் என்பவர் தொடர்ந்து தலைமறைவாகி இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி ஆன ஜீவகன் அவரது கூட்டாளியான சலீம் என்பவருடன் ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை சித்தோடு காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். போலீசார் விசாரணையில் தான் கொலைக்கான முழுமையான காரணம் தெரிய வரும்.இந்நிலையில் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட ஜானின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது

Similar News