உண்ணாவிரதம்

தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்;

Update: 2025-03-24 10:33 GMT
தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அடங்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்தது. அதன்படி ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயமனோகரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சரவணன், மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு, உயர்மட்டக்குழு உறுப்பினர் செல்வராணி ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ரமாராணி, தங்கவேலு, பொதுக்குழு உறுப்பினர் பிரகாசம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு பாதிப்பை அளிக்கக்கூடிய கடந்த 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை எண் 243 ரத்து செய்யப்பட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கும் மேலாக காலியாக உள்ள பணிஇடங்களை நிரப்ப வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்தும் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.மேற்கண்ட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Similar News