ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க பொது மக்கள் எதிர்ப்பு !
சேலத்தில் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-06 10:55 GMT
சேலம் குகை சீரங்கன் தெருவில் உள்ள திருமணிமுத்தாறு கரையோரத்தில் 7 வீடுகள் கட்டுப்பட்டுள்ளன. இந்த வீடுகள் நீர்நிலை பகுதிகளில் கட்டுப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதுதொடர்பான விசாரணையின் போது இந்த வீடுகளை இடித்து அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையில் அந்த இடத்தில் இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான இடம், அத்துமீறி நுழைந்தால் சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐகோர்ட்டு உத்தரவுபடி அந்த வீடுகளை இடித்து அகற்றுவதற்காக நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் அங்கு வந்தனர். அப்போது அந்த வீடுகளை இடிக்க பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தும், அதன் முன்பு படுத்தும், அமர்ந்தும் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாசில்தார் தாமோதரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் அவர்கள் எங்களுக்கு மாற்று இடம் கொடுங்கள் என்று கூறினர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் மனு எழுதி கொடுங்கள் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.