கோவிலில் தேர்தல் புறக்கணிப்பு பிளக்ஸ் போர்டு வைத்த பொதுமக்கள்
செருப்பங்கோடு கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி ஊசிக்காட்டு சிவ சுடலைமாடன் சுவாமி கோவிலில் தேர்தல் புறக்கணிப்பு பேனரை பொதுமக்கள் வைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டிமாங்கோடு மற்றும் நெட்டாங்கோடு ஆகிய இரண்டு ஊராட்சிகள் மத்தியில் அமைந்துள்ளது செருப்பங்கோடு குக்கிராமம். இங்கு சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டு பாசனத்திற்காக இப்பகுதி வழியாக இரட்டைக்கரை கால்வாய் வெட்டிய காலத்தில் இருந்தே கிழக்கு மேற்கு என பிரிந்து நடைமுறையில் இருந்து வருகிறது.
பஞ்சாயத்து ராஜ் திட்டத்திற்கு பின் சிறிய ஊராட்சிகள் பிரிக்கப்பட்டபோது கிழக்கு பகுதி கட்டிமாங்கோடு ஊராட்சியிலும் மேற்கு பகுதி நெட்டாங்கோடு ஊராட்சியிலும் இருந்து வருகிறது. தற்போதைய நெட்டாங்கோடு ஊராட்சி தலைவி பதவி ஏற்றது முதல் நான்கரை ஆண்டுகளாக இங்கு நல உதவிகள் தர மறுத்து வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குக்கிராம பட்டியலில் சேர்க்கவும் பிடிஓ கடந்த மார்ச் 2020-ல் கலெக்டருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
ஜேஜேஎம் கூட்டு குடிநீர் இணைப்பு, வீட்டு வரி ரசீது உட்பட அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்க 4 பிடிஓக்கள் உத்தரவிட்டுள்ளனர். கிராம சபையில் மனு கொடுத்து உள்ளனர். ஆனால் எந்த உத்தரவுகளையும் நெட்டாங்கோடு ஊராட்சி நிர்வாகம் கண்டு கொண்டதாக தெரியவில்லை. எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி அடிப்படை தேவைகளை வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அல்லது ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக இப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பு பதாகையை செருப்பங்கோடு, ஊசிக்காட்டு சிவ சுடலைமாடன் சுவாமி கோவிலில் ஊர் மக்கள் சார்பில் தொங்க விடப்பட்டுள்ளனர்.