சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு கோரி மனு
சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் மனு அளித்தனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் அயிலை சிவசூரியன் தலைமையில் அந்தநல்லூா், மணிகண்டம் ஒன்றிய வாழை விவசாயிகள்அளித்த மனு விவரம்: அந்தநல்லூா் ஒன்றியம் பெட்டவாய்த்தலை, பெருகமணி, சிறுகமணி, திருப்பராய்த்துறை, திண்டுக்கரை, கொடியாலம், புலிவலம், குழுமணி, கோப்பு, எட்டரை, முள்ளிகரும்பூா், திருச்செந்துறை, அல்லூா், பழூா், முத்தரசநல்லூா், மருதாண்டகுறிச்சி பகுதிகளிலும், மணிகண்டம் ஒன்றியத்தில் வயலூா், அதவத்தூா், சோமரசம்பேட்டை பகுதிகளிலும், தொட்டியம், மண்ணச்சநல்லூா், லால்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சுமாா் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நேந்திரன், நெய்பூவன், கற்பூரவள்ளி, பூவன் ரக வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
மழை பொய்ப்பு, வாய்க்கால் வடது, நிலத்தடி நீா் குறைவு, வெயில் தாக்கம் காரணமாக வாழைகள் வாடி கருகி வருகிறது. இதனிடையே கடந்த 5 ஆம் தேதி வீசிய சூறைக்காற்றால் ஆயிரக்கணக்கான ஏக்கா் வாழைகள் சாய்ந்தன. ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் வரை செலவு செய்த நிலையில் தற்போது பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதை தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.