திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூரில் நீட் தேர்வு முறைகேடு,கள்ளச்சாராய சாவுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வு முறைகேடுகள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவும், சாதி மறுப்பு காதல் திருமணம் செய்தவர்களுக்கு அடைக்கலம் தந்த மார்க்சிஸ்ட் கட்சி நெல்லை மாவட்ட அலுவலகத்தைத் தாக்கிய சமூக விரோதிகள் மீது வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யவும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்த சம்பவத்தை கட்டுப்படுத்தத் தவறிய அரசு நிர்வாகத்தைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலம்பாளையம் கலையரங்கம் அருகே வியாழனன்று மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் வேலம்பாளையம் நகரக்குழு உறுப்பினர் அ.உமாநாத் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முறைகேடுகளுக்கு வழிவகுத்து செல்வந்தர்கள் குடும்பப் பிள்ளைகள் மட்டுமே மருத்துப் படிப்பில் சேர முடியும் என்ற நிலையை ஏற்படுத்தும் நீட் தேர்வு முறைகேட்டை விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிப்பதுடன்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த தம்பதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கிய சமூக விரோதிகள், கூலிப்படையினர் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யவும்,
உடந்தையாக செயல்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி ஏராளமானோர் உயிரிழந்த சம்பவத்தில் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தத் தவறி அரசு நிர்வாகம் மற்றும் உடந்தையாக செயல்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால், நகரச் செயலாளர் ச.நந்தகோபால், நகரக்குழு உறுப்பினர்கள் அ.ஆறுமுகம், சுகுமார், ஆர்.கவிதா உள்ளிட்டோர் உரையாற்றினர்.
இதில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பெண்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.