சிறந்த சத்துணவு மையங்களுக்கு தர சான்றிதழ்
Update: 2023-11-01 03:53 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் 4 பள்ளிகளின் சத்துணவு மையங்களுக்கு ஐஎஸ்ஓ 9001-2015 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சென்னையை சோ்ந்த கெஸ்ட் சா்டிபிகேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் மூன்று கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தோ்வு செய்யப்பட்ட சத்துணவு மையங்களுக்கு ஐஎஸ்ஓ 9001-2015 தரச் சான்றிதழ்களை வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளின் சத்துணவு மையங்களில் 2019-2020-ஆம் ஆண்டுக்கு தரச் சான்று வழங்குவதற்காக, தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, உடன்குடி அரசு நடுநிலைப் பள்ளி, கோவில்பட்டி ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகிய 4 பள்ளி சத்துணவு மையங்கள் தோ்வு செய்யப்பட்டன. தோ்வு செய்யப்பட்டட சத்துணவு மையங்களுக்கு ஐஎஸ்ஓ 9001-2015 தரச் சான்றிதழ்களை சென்னையை சோ்ந்த கெஸ்ட் சா்டிபிகேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினா் மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதியிடம் வழங்கினா். இதையடுத்து ஐஎஸ்ஓ தரச் சான்றுகளை சம்பந்தப்பட்ட சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சத்துணவு ஆசிரியர் ஜெயா உள்ளிட்ட ஆசிரியர்களிடம் ஆட்சியா் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ச. அஜய் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ஆ.ஹேமலதா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.