ராமநாதபுரம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

ராமநாதபுரம் கடலாடியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அயோடின் உப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2024-01-24 09:04 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில், கடலாடி பிளாக்-ல் உள்ள T மாரியூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளின் அயோடின் உப்பின் அவசியம் குறித்தும் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பில் அயோடின் உள்ளதா என்பதை கண்டறியும் விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் சாரதா துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) நேர்முக உதவியாளர் ஷேக் அப்துல்லா கலந்துகொண்டு கூறுகையில், நமது மண்ணில் அயோடின் சத்து மிக மிகக் குறைவான அளவே இருப்பதால் நாம் அனைவருக்கும் உடல் மற்றும் மன வளர்ச்சிக்காக தினந்தோறும் தேவைப்படும் அயோடின் சத்து நமக்கு கிடைப்பதில்லை. இதனால் உடல் சோர்வு, தோல் உலர்வு, முடி கொட்டுதல், குழந்தைகள் மந்தமாக இருத்தல், போன்ற சிறிய குறைபாடுகளில் இருந்து தைராயிடு பிரச்சனை, முன்கழுத்துக் கழலை, சிசு மரணம், சிசு இறந்து பிறத்தல், குறை பிரசவம், சிசு ஊனத்துடன் பிறத்தல், மலட்டுத் தன்மை, மூளை வளர்ச்சி குறைவு, அறிவு மந்தம் போன்ற பல குறைபாடுகள் ஏற்படுகின்றது.

இதனை தவிர்க்க நம் அனைவருக்கும் தினந்தோறும் அயோடின் சத்து கிடைப்பதற்காக நாம் அனைவரும் அன்றாடம் உட்கொள்ளும் உப்பில் அயோடின் சத்து சேர்க்கப்படுகின்றது. என்றார. அதனை தொடர்ந்து வாலிநோக்கம் ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் சுகந்த் குறிப்பிடுகையில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் உணவுக்காக தயாரிக்கப்படும் உப்பில் அயோடின் 15 முதல் 30 பிபிஎம் அளவில் சேர்க்கப்பட்ட விற்கப்பட வேண்டும் என்றார். உலக சுகாதார நிறுவனம் நாளொன்றுக்கு ஒருவர் 5 கிராம் உப்பு மட்டுமே உட்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கின்றது.

நாம் ஏறக்குறைய 10 முதல் 15 கிராம் உப்பை நாளொன்றுக்கு உட்கொள்கின்றோம். இதுவே பெருகிவரும் இதய நோய்களுக்கு முக்கிய காரணம். எனவே உப்பை படிப்படியாக சிறுக சிறுகக் குறைத்துக் கொள்ள வேண்டும். இதய நோய் உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரையின் பேரில் சோடியம் அளவு குறைவாக உள்ள உப்பை (low sodium salt) உட்கொள்ள வேண்டும் என்றார். கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் செயலாளர் செய்யது இப்ராஹிம், குறிப்பிடுகையில், உப்பானது, உணவு தவிர தோல் பதனிடுதல் போன்ற உணவிற்கு அல்லாத பொருட்களைப் பதப்படுத்துவதற்காகவும் உபயோகப்படுத்தப்படுகின்றது.

பொதுமக்கள் உப்பு பொட்டலத்தின் அடிப்பகுதியில் ஆங்கிலத்தில் பதப்படுத்தும் உபயோகத்திற்கானது (for preservative purposes only) எனக் குறிப்பிட்டிருந்தால் அந்த உப்பை உணவிற்காக வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. இதில் நமது உடல் மற்றும் மன நலனுக்கான அத்தியாவசிய தேவையான அயோடின் சத்து சேர்க்கப்படுவதில்லை. மேலும் அவர், இந்து இமாலய பாறை உப்பிலும் அயோடின் சத்து சேர்க்கப்படுவதில்லை. அந்த உப்பிலும் கடல் உப்பில் உள்ள அதே அளவே சோடியம் தான் உள்ளது.

எனவே உப்பு எந்த உப்பாக அல்லது எந்த நிறத்தில் இருப்பினும் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பே பொதுமக்கள் உணவிற்காக வாங்கி பயன்படுத்த வேண்டும் என பங்கேற்பாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன் , இராமநாதபுரம் நுகர்வோர் நல சங்கம் செயலாளர் லதா ,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப் பாண்டியன் பள்ளி அறிவியல் ஆசிரியர் வளர்மதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News