கோடை காலத்தில் சீரான குடிநீர் விநியோகம் - ஆட்சியர் அறிவுறுத்தல்
கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் அலுவலர்களுக்கு ஆட்சியர் பிருந்தாதேவி அறிவுரை வழங்கினார்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:- சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 11 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் மட்டும் 4 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள், 4 ஆயிரத்து 466 ஊரக குடியிருப்புகளுக்கு தினமும் சராசரியாக 189.18 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 33 லட்சத்து 94 ஆயிரம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
மாநகர பகுதிகளில் உள்ள 4 மண்டலங்களின் 60 வார்டுகளில் உள்ள 9 லட்சத்து 66 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் தனி குடிநீர் திட்டம் மற்றும் நங்கவள்ளி குடிநீர் திட்டம் மூலம் தினமும் 130 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஜல் ஜீவன் திட்டம், மாநில மற்றும் மாவட்ட சேமிப்பு திட்டங்கள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.