தற்கொலை செய்து கொண்ட மக்கள் நலப்பணியாளரின் உடலை வாங்க உறவினர் மறுப்பு.
பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி அருகே தற்கொலை செய்து கொண்ட மக்கள் நலப்பணியாரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
By : King 24x7 Website
Update: 2024-03-11 13:08 GMT
பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையத்தை சேர்ந்தவர் துரைராஜ் இவரது மனைவி தமிழ்ச்செல்வி(45). இவர் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோதூர் ஊராட்சியில் மக்கள் நல பணியாளராக பணியாற்றி வந்தார். தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி கோனூர் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர் நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இரண்டு நபர்களுக்கு வேலை பார்க்காமலேயே அடையாள மட்டை போட்டு தருமாறு கேட்டு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தமிழ்ச்செல்வி மறுத்து விட்டதால் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கடந்த 6-ஆம் தேதி வில்லிபாளையத்தில் உள்ள அவரது வீட்டில் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை தமிழ்ச்செல்வி உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற பரமத்தி போலீசார் அவரது உடலை மீட்டு சேலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இரண்டு நபர்களுக்கு வேலை பார்க்காமலேயே அடையாள அட்டை போட்டு தருமாறு மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தமிழ்ச்செல்வியின் உடலை வாங்க மாட்டோம் என கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து விட்டனர். தொடர்ந்து சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரமத்தி போலீஸ் நிலையத்தில் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அவரது உறவினர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மக்கள் நலப்பணியாளர் சிலரது மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.