குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து: ராமதாஸ் வரவேற்பு
செய்யாறு உழவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கை கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 2700 ஏக்கர் விளைநிலங்கள் சட்டத்திற்கு எதிரான முறையில் பறிக்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக பச்சையப்பன், தேவன், அருள், திருமால், சோழன், பாக்கியராஜ், மாசிலாமணி ஆகிய 7 உழவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை திரும்பப் பெறுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவை உண்மையாக இருந்தால் வரவேற்கத்தக்கவை. தமிழக அரசு அதன் தவறை உணர்ந்து, திருத்திக் கொண்டிருப்பது நல்ல மாற்றம் ஆகும். தமிழ்நாட்டின் முதன்மைத் தொழில் விவசாயம் தான். அனைத்து மக்களுக்கும் உணவளிக்கும் உழவர்களுக்கு அவர்களின் மண்ணைக் காக்க அனைத்து தகுதியும், உரிமையும் உண்டு. மண்ணைக் காக்க போராடுவது இந்திய அரசியலமைப்புச் சட்டமே வழங்கிய உரிமை ஆகும். மண்ணைக் காக்க போராடியதற்காக உழவர்களை கைது செய்ததை நியாயப்படுத்தவே முடியாது.
உரிமைக்காக போராடும் உழவர்கள் மீது தமிழக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது இதுவே இறுதியாக இருக்க வேண்டும். இனி எந்தக் காலத்திலும் இந்தத் தவறை தமிழக அரசு செய்யக் கூடாது. வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக சிக்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட வேண்டியது அவசியம் தான். ஆனால், உணவளிக்கும் விளைநிலங்களை அழித்து விட்டு, அங்கு தொழிற்சாலைகளை அமைக்க வேண்டிய தேவை இல்லை என்பதை அரசு உணர வேண்டும்.
செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பதைக் கண்டித்து போராடி வரும் உழவர்கள் மீது பல்வேறு கட்டங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 2700 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு நிலங்களில் சிப்காட் வளாகங்களை அமைக்க வேண்டும். தொழில்திட்டங்களுக்காக வேளாண்மை விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்பதை கொள்கை முடிவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.