குளம் நிரம்பியது : 25 கிராம குடிநீர் தேவைக்கு தீர்வு
முத்தையாபுரம் எல்லப்ப நாயக்கன்குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதன் மூலம் 25 கிராம பஞ்சாயத்துகளின் குடிநீர் தேவைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள மேலதிருச்செந்தூர் பஞ்சாயத்து முத்தையாபுரம் கிராமத்தில் உள்ள 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட எல்லப்பநாயக்கன் குளத்திற்கு ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தென்கால் மூலம் தென்திருப்பேரையிலுள்ள கடம்பாகுளம் வழியாக 14 குளங்களை கடந்து தாமிரபரணி ஆற்று தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
வழிநெடுகிலும் உள்ள குளங்கள் நிறைந்த நிலையில் கடந்த சில நாட்களாக எல்லப்பநாயக்கன்குளத்துக்கு அதிக அளவில் தண்ணீர் வரத்து இருந்தது. இதன் மூலம் நேற்று அதிகாலையில் இந்த குளம் நிறைந்து மறுகால் பாய்ந்து வருகிறது. இந்த தண்ணீர் உடன்குடி ஊரணிக்கு செல்கிறது. எல்லப்பநாயக்கன் குளத்திலிருந்து மேலதிருச்செந்தூர், மணப்பாடு, குலசேகரன்பட்டினம், ஆலந்தலை, கல்லாமொழி, வெள்ளாளன்விளை, சிறுநாடார் குடியிருப்பு, நடுநாலுமூலைக் கிணறு உள்ளிட்ட 25 கிராம பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது இந்த குளம் நிரம்பி வழிவதால், 25 கிராம பஞ்சாயத்துகளிலும் குடிநீர் தேவைக்கு தீர்வு கிடைத்துள்ளது. அத்துடன், இப்பகுதியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வறண்டு கிடந்த இந்த குளம் நிரம்பி வழிவது இப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், குலசேகரன்பட்டினம் தருவைகுளம் நிரம்பும் வரை ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தென்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தருவைகுளம், உடன்குடி ஊரணிகுளம் மற்றும் வழிநெடுகிலும் உள்ள சிறிய நீர்பிடிப்பு பகுதிகளும் நிரம்பும் வரை எல்லாம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படவேண்டும். இதன் மூலம் இப்பகுதி கிராமங்களின் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் என்றனர்.