சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி
ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் திருவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் 35வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கும் விதமாக நடைபெற்ற தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் சுமார் 300- க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் காவலர்கள், போக்குவரத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். மேலும், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ,நான்கு சக்கர வாகனங்களில் சிகப்பு பிரதிபலிப்பான் பட்டை(Red Reflective Sticker ) ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இப்பேரணி மூலம் தலைக்கவசம் அணிவதன் பயன்கள், வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசக்கூடாது, அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனங்களில் பயணிக்க கூடாது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது, இரண்டு பேரை தவிர அதிகமான நபர்களை இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக திருவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் மணிக்கூண்டு வரை சென்று நிறைவடைந்தது.