சாலை பாதுகாப்பு மாதம் - தலைக்கவசம் அணிந்து காவல்துறையினர் வலம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சியில் காவல்துறையினர் தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் பேரணியாக வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Update: 2024-02-01 07:41 GMT
தமிழக அரசின் சார்பில் 35 வது சாலை பாதுகாப்பு மாத விழா தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது . அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிவதன் பயன்கள், வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசக்கூடாது, அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனங்களில் பயணிக்க கூடாது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது, இரண்டு பேரை தவிர அதிகமான நபர்களை இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஹெல்மெட் அணிந்து வலம் வந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் கண்ணன் வாகன பேரணியை துவக்கி வைக்க அங்கிருந்து புறப்பட்ட இருசக்கர வாகன பேரணி பேருந்து நிலையம், சின்னக்கடை பஜார், இராமகிருஷ்ணாபுரம் முக்கு அதனை தொடர்ந்து நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து இறுதியில் நகர் காவல் நிலையத்தில் பேரணி நிறைவடைந்தது. 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஒன்றாக தலைக்கவசம் அணிந்து வலம் வந்ததை நகர் பகுதியில் நின்றிருந்த மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.