பள்ளி மாணவர்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் - ஆட்சியர்
அரசு பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக வழங்குவதற்காகவும் மற்றும் கிராமப்புற நூலகங்களில் வைப்பதற்காகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மட்டும் சுமார் 40 லட்சம் ரூபாய் அளவிற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார்.
விருதுநகரில் மதுரை சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 16ஆம் தேதி இரண்டாவது புத்தகத் திருவிழா தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழாவில் 100க்கு மேற்பட்ட அரங்குகள் மற்றும் 5 லட்சத்துக்கு மேற்பட்ட புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த 11 நாட்களாக விருதுநகரில் நடைபெற்று வந்த 2வது புத்தக திருவிழாவின் நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இந்த புத்தக திருவிழாவின் நிறைவு விழாவில் பள்ளி மாணவிகளின் நடன நாட்டிய நிகழ்ச்சி பார்வை யாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த புத்தக திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் 2வது புத்தக திருவிழாவின் நிறைவு விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், விருதுநகரில் 11 நாட்கள் நடைபெற்ற 2வது புத்தக திருவிழாவில் பள்ளி குழந்தைகள் இளைஞர்கள் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த புத்தகத் திருவிழாவை பார்வையிட்டு சென்று உள்ளனர் என தெரிவித்தார்
மேலும் 11 நாட்கள் நடைபெற்ற 2வது புத்தகத் திருவிழாவில் ரூ.1 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்றார். மேலும் அரசு பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக வழங்குவதற்காகவும் மற்றும் கிராமப்புற நூலகங்களில் வைப்பதற்காகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மட்டும் சுமார் 40 லட்சம் ரூபாய் அளவிற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் புத்தக திருவிழாவின் போது காட்சிப்படுத்தப்பட்டிருந்த வைப்பாற்றகரையின் வரலாற்றை எடுத்துச் சொல்லும் நம்முடைய தொல் தமிழர்கள் வாழ்ந்த வைப்பாற்றங்கரை மேடு வெம்பக்கோட்டை அகழாய்வு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட பல்வேறு அகழாய்வு சான்றுகளை வரலாற்று ஆவணங்களை ஏராளமான பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் பார்த்து சென்று உள்ளனர் என தெரிவித்தார். மேலும்பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்களால் பயன்படுத்தி வரக்கூடிய மிகவும் அரிதான இசைக்கருவிகள் பெரும்பாலான பொது மக்களை கவர்ந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்