சேலம் சுகவனேஸ்வரர் கோவில் தேரோட்டம்
வைகாசி விசாக தேர் திருவிழாவையொட்டி நடந்த சேலம் சுகவனேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் சுகவனேஸ்வரர் மற்றும் சொண்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் மற்றும் தினமும் மாலை நேரத்தில் திருவீதி உலா என பல்வேறு வைபவங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தேர் திருவிழா இன்று நடைபெற்றது.
இதனை ஒட்டி சுகவனேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணியளவில் சுகனேஸ்வரருக்கும் சொர்ணாம்பிகை தாயாருக்கும் பால் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவமூர்த்தியான சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு பட்டு ஆடைகள் உடுத்தி பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ராஜகணபதி கோவில் முன் உள்ள தேரில் சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க அர்ச்சனைகள் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் நமச்சிவாய என கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் ராஜகணபதி கோவில் தொடங்கி இரண்டாவது அக்ரஹாரம், சின்ன கடைவீதி, முதல் அக்ரஹாரம் வழியாக பவனி வந்து மீண்டும் ராஜ கணபதி கோவில் அருகே வந்தடைந்தது. பின்னர் சிவாச்சாரியார் மகா தீபாரதனை காண்பித்தார் தேர் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்த பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது.