சேலத்தில் பயங்கரம் தொழிலாளி அடித்துக்கொலை
சேலம் அருகே மதுபோதையில் இருந்து துப்புரவு தொழிலாளியை அடித்து கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் கிச்சிப்பாளையம் கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் சேகர் என்கிற நாய் சேகர் (வயது 46), கூலிதொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். நேற்று முன்தினம் இரவு சேகர், தாதுபாய்குட்டை டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தினார். பின்னர் அவர் மதுக்கடைக்கு எதிரே நடைமேடையில் அமர்ந்திருந்தார். அதே நடைமேடையில் ஏற்கனவே கிச்சிப்பாளையம் குப்பைமேடு பகுதியை சேர்ந்தவரும் மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றுபவருமான சின்ராஜ் (38) என்பவர் மது போதையில் படுத்திருந்தார்.
அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.350 ஆகியவற்றை சேகர் எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த சின்ராஜ், சேகரிடம் தன்னுடைய செல்போன் மற்றும் பணத்தை திரும்ப கேட்டார். அவர் கொடுக்க மறுத்துள்ளார். அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தாக்கிகொண்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த சின்ராஜ், சேகரின் தலை மற்றும் வாய்பகுதியில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சேகர் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் டவுன் போலீசார் சின்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.