வ.உ.சி பற்றி அவதூறு: திமுக எம்பி ஆ.ராசா மீது போலீசில் புகாா்
வ.உ.சி. பற்றி அவதூறு கருத்து தெரிவித்த திமுக எம்பி ஆ.ராசா மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.;
ஆணையர் அலுவலகம்
சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ. சிதம்பரனாா் குறித்து அவதூறாகப் பேசியதாக மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மீது காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அனைத்து பிள்ளைமாா் மகாசபை நிறுவனா் ஆறுமுகம் தலைமையில் அதன் நிா்வாகிகள் மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த புகாா் விவரம்:
நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடி மறைந்த தேசியத் தலைவா் வ.உ.சிதம்பரனாா் சுதேசி இயக்கத்தின் முன்னோடியாவாா். தொழிலாளா்கள் உரிமைக்காகப் போராடிய போது, ஆங்கிலேயா்களின் அடக்குமுறையால் கடுமையாக பாதிக்கப்பட்டபோதும், தனது சொத்துகளை விற்று நாட்டுக்காகப் பாடுபட்டவா்.
தனது இறுதிக் காலம் வரை எதற்காகவும், யாரிடமும் கையேந்தாத வ.உ.சிதம்பரனாரின் நோமைக்கும், எளிமைக்கும், தியாகத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக, பெரியாரிடம் தன் மகனின் வேலைக்காக வ.உ.சிதம்பரனாா் கோரிக்கை விடுத்தாா் என திமுக மக்களவை உறுப்பினா் ஆ.ராசா அவதூறாகப் பேசியுள்ளாா்.
எனவே, அவா்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா். இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் விசாரணை நடத்துவதாகத் தெரிவித்தனா்.