தந்தையை கொல்ல முயன்ற மகன் 4 ஆண்டுகளுக்கு பின் கைது
குளச்சல் அருகே தந்தையை பீர் பாட்டிலால் குத்தி கொல்ல முயன்ற வழக்கில் அவரது மகனை போலீசார் 4 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுவாமிதாஸ் (63). கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவர் மனைவி கவிதா கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுவாமிதாஸ் வீட்டிலிருந்த போது ஆறு பேர் கொண்ட கும்பல் தகராறு செய்து பீர் பாட்டிலால் அவரைக் குத்தி விட்டு தப்பி சென்றனர். மனைவி கவிதாவின் தூண்டுதலின் பேரில் 6 பேர் தன்னை தாக்கியதாக குளச்சல் போலீசில் சுவாமி தாஸ் புகார் கூறியிருந்தார். போலீசார் கவிதா உட்டட ஏழு பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சுவாமி தாசை பீர் பாட்டில் குத்தி கொலை செய்ய முயன்றது அவரது மகன் விஜய் (22) என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் குளச்சல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி நேற்று லட்சுமிபுரம் பகுதியில் ரோந்து சென்ற போது சுவாமிதாஸ் வீட்டிலிருந்து கும்பலாக பேசும் சத்தம் கேட்டது. உடனே போலீசார் சோதனையில் சுவாமி தாசை பீர் பாட்டிலால் குத்திய அவருடைய மகன் விஜய் அங்கு தங்கி இருந்தது தெரிய வந்தது.விஜய்யுடன் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அவரது நண்பர்கள் முத்துக்குமார் என்ற ரீகன் (21) முத்துப்பாண்டி (19) ராஜ்கிரன் (22) மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோரும் தங்கி இருந்தனர். நண்பர்கள் நான்கு பேரும் குடிப்பதற்கு கள் வைத்திருந்தனர். இதை அடுத்து தந்தையை கொல்ல முயன்ற வழக்கில் விஜயை போலீசார் கைது செய்தனர். அத்துடன் கள் வைத்து இருந்த குற்றத்திற்காக நண்பர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.