காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்பி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர் உட்பட 32 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

Update: 2024-02-18 06:23 GMT

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பசுவந்தனை காவல் நிலைய திருட்டு வழக்கில் வழக்குபதிவு செய்த அன்றே சம்பந்தப்பட்டவரை கைது செய்து, ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 25 கிலோ காப்பர் வயரை கைப்பற்றி, அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய பசுவந்தனை காவல் நிலைய காவல் ஆய்வாளர்  முத்துமணி, உதவி ஆய்வாளர்  ரவீந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர்  மார்த்தாண்டபூபதி, முதல் நிலை காவலர்கள்  பெரியசாமி,  பிரான்சிஸ் சேவியர்,  அனந்தகிருஷ்ணன் மற்றும்  முனியசாமி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

ஆத்தூர் மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் மற்றும் அவரது குழந்தை காணாமல் போன வழக்கில்  சென்னையில் இருப்பதை கண்டுபிடித்து மீட்ட ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர்  மாரியப்பன், உதவி ஆய்வாளர்  செல்வகுமார், தலைமை காவலர்  முத்துக்குமார், முதல் நிலை காவலர்  பென் ஜான்சன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேர்ந்தபூமங்களம் அருகே போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்து, அதில் இருந்த 520 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததை கைப்பற்றிய ஆத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்  முத்து மற்றும் முதல் நிலைக் காவலர்  முத்துசெல்வம் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1,500/- அபராதமும் தண்டனையாக பெற்றுதர உதவியாக இருந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  முத்து வீரப்பன், புதுக்கோட்டை காவல் நிலைய முதல் காவலர்கள்  முத்துலட்சுமி,  வெள்ளைச்சாமி மற்றும் முறப்பநாடு காவல் நிலைய காவலர்  மீனாட்சிசுந்தரம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் சார்பு செய்தும், நல்ல முறையில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 4 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1,000/- அபராதமும் பெற்றுத்தர உதவியாக இருந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  அந்தோணிராஜ், முதல் நிலை காவலர்  சந்திரா மற்றும் காவலர்  அண்ணாதுரை ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

தூத்துக்குடி வழியாக திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலை கல்லால் தாக்கி சேதப்படுத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய உதவியாக இருந்த மணியாச்சி உட்கோட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்  முருகானந்தம், நாரைக்கிணறு காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர்  விடுதலை பாரதி கண்ணன் மற்றும் மணியாச்சி காவல் நிலைய தனிப்பிரிவு காவலர்  மதிவாணன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிலுவையில் இருந்த பிடியாணை எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய முத்தையாபுரம் காவல் நிலைய தலைமை காவலர்கள்  அப்பாதுரை,  சதீஷ்குமார் மற்றும்  அருணாச்சலம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த வழிப்பறி வழக்கில் சாட்சிகளை முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சம்பந்தப்பட்டவருக்கு 2 வருட சிறை தண்டனையும் ரூபாய் 5,000/- அபராதமும் பெற்றுத்தர திறம்பட செயல்பட்ட நாரைக்கிணறு காவல் நிலைய முதல் நிலை காவலர்  பெருமாள் என்பவரின் மெச்சத்குத்த பணிக்காகவும்,

முறப்பநாடு காவல் நிலைய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 8வது எதிரியை கைது செய்ய உதவியாக இருந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய முதல் காவலர்கள்  மாரியப்பன் மற்றும்  செல்வகுமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சாட்சிகளுக்கு சமன் சார்பு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் ஆயிரம் அபராதமும் பெற்றுத்தர திறம்பட செயல்பட்ட சாயர்புரம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள்  இளையராஜா மற்றும்  ரமேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் கடந்த 3 மாதங்களாக நிலுவையில் இருந்து வந்த மூன்று பிடிகட்டளைகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய காவலர்  சோலையப்பன் என்பவரின் மெச்சத்தகுத்த பணிக்காகவும், 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 32 காவல்துறையினரின் சிறந்த பணியை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின்போது தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  கார்த்திகேயன் மற்றும் காவல் உதவி கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News