சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம்
சாலை விபத்துக்கான காரணம் அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், விபத்து ஏற்பட்டால் உதவிக்கு 1033 என்ற எண்ணை அழைக்க வேண்டும், சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.;
Update: 2023-10-28 06:34 GMT
சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷியாமளாதேவி முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கடந்த மாதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்துக்கள் குறித்தும், என்னென்ன காரணங்களால் அந்த விபத்துகள் நடைபெற்றது, மீண்டும் அந்த இடங்களில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவிலான சாலை விபத்துகள் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்துள்ளது. அடுத்ததாக மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் கிராம சாலைகளில் நடந்துள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்துக்களை தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்த விரிவான அறிக்கையை உரிய புகைப்பட ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். , தேசிய நெடுஞ்சாலைத்துறையின் உதவிப்பொறியாளர் அவர்கள் தெரிவிக்கையில், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் விபத்து ஏற்படும் நேரங்களில் 1033 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டால் உடனடியாக அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அவசர ஊர்தி சம்பவ இடத்திற்கு வந்து போதிய உதவிகள் வழங்கப்படும். மேலும், வாகனங்கள் பழுதாகி நின்றாலோ, எரிபொருள் இல்லாமல் நின்றுவிட்டாலோ, வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, அவசர உதவி ஏற்பட்டாலும் 1033 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அழைக்கலாம். 24 மணிநேரமும் அவசரகால ஊர்தி தயார் நிலையில் இருக்கும் என்று தெரிவித்தார். இதைக்கேட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் , தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நேரத்தில் உதவ இப்படி ஒரு வசதி உள்ளது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவே, தேசிய நெடுஞ்சாலையில் விபத்து மற்றும் அவசர கால உதவிக்கு 1033 எண்ணை அழைக்கலாம் என்ற புரிதலை அனைவரிடத்திலும் சென்று சேருங்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். அதிவேகமாக செல்லும் வாகனங்களின் எண்ணை படம்பிடித்து காவல்துறைக்கு அனுப்பும் நவீன தொழில்நுட்பத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் அமல்படுத்த தேவையான திட்ட அறிக்கையினை தயார் செய்து வழங்கிட வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை ரத்துசெய்து, சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் சாலை பாதுகாப்பு மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர மஞ்சுளா, வருவாய் கோட்டாட்சியர் பொருப்பில் உள்ள சத்திய பாலகங்காதரன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் பழனிசாமி ஊராட்சிகள் உதவி இயக்குநர் அருளாளன், வட்டார போக்குவரத்து அலுவலர் பொறுப்பில் உள்ள பிரபாகரன் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், காவல்துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.