சூரமங்கலம் மண்டல ஆபிசை இடமாற்றம் செய்யக்கூடாது - அம்பேத்கர் மக்கள் இயக்கம் கோரிக்கை
சூரமங்கலம் மண்டல ஆபிசை இடமாற்றம் செய்யக்கூடாது என அம்பேத்கர் மக்கள் இயக்கம் கோரிக்கை
Update: 2024-02-14 09:50 GMT
அம்பேத்கர் மக்கள் இயக்க மாநிலத்தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அலுவலகம், ஜங்ஷன் அருகே உள்ள பழைய சூரமங்கலத்தில் செயல்பட்டு வருகிறது. 15 வார்டை உள்ளடக்கிய இந்த மண்டல அலுவலகத்திற்கு மக்கள் சிரமமின்றி வந்து செல்கின்றனர். இதனிடையே சூரமங்கலம் மண்டல அலுவலகத்தை சத்திரம் தெப்பக்குளம் பகுதிக்கு மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு எடுத்திருப்பது மக்களுக்கு மிகுந்த சிரமத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். பள்ளப்பட்டி, லீபஜார், புதிய பேருந்து நிலையம், 4 ரோடு, அரிசிபாளையம் ஆகிய பகுதிகளை கடந்து தான், சத்திரம் பகுதிக்கு வர வேண்டும். இது போக்குவரத்து நெரிசலை உண்டாக்கி அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்தும். அதனால் தற்போதுள்ள சூரமங்கலம் மண்டல அலுவலகத்தை ஒட்டியிருக்கும் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய அலுவலகம் கட்டி அதே இடத்தில் இடமாற்றம் செய்யலாம். எனவே, பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசும், சேலம் மாநகராட்சி நிர்வாகமும் சூரமங்கலம் மண்டல அலுவலகத்தை இடம் மாற்றம் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.