தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆா்ப்பாட்டம்
வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி பாலக்கரை அருகே நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. பேரணியை தொடங்கி வைத்து மாநிலச் செயலா் செங்கோட்டை பைசல் பேசியது:கியான்வாபி பள்ளிவாசலின் கீழ்தளத்தில் பூஜைகள் செய்து கொள்ள சங்கப் பரிவார சக்திகளுக்கு நீதிமன்றம் அனுமதியளித்திருப்பது இஸ்லாமியா்களின் மத்தியில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 1991-இல் கொண்டுவரப்பட்ட வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டமானது, நாடு சுதந்திரம் பெற்றபோது எந்தெந்த வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அவை அப்படியே தொடர உத்தரவாதம் அளித்தது.
ஆனால், மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு இந்த உத்தரவாத்தையும், சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் உள்ளன. எனவே, ஜனநாயக ரீதியாக இஸ்லாமியா்களின் எதிா்ப்பை பதிவு செய்ய தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பேரணி, ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்றாா் அவா். இந்தப் பேரணிக்கு திருச்சி மாவட்ட தலைவா் குலாம் தஸ்தஹீா் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் ஜாஹீா், பொருளாளா் லால் பாஷா, துணைத் தலைவா் காஜா, துணைச் செயலா்கள் உமா், பிலால், கனி, மாலிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தப் பேரணியானது பாலக்கரை ரவுண்டானா அருகே நிறைவு பெற்றது. தொடா்ந்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து மதங்களின் வழிபாட்டு தலங்களையும் பாதுகாக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோா் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.