மதுரை முருகன் பழமுதிர் சோலையில் உற்சாகமாக நடைபெற்ற தைப்பூச உற்சவம்
மேலூர் அருகே முருகனின் ஆறாவது படைவீடாக போற்றக்கூடிய பழமுதிர் சோலையில் உற்சாகமாக நடைபெற்ற தைப்பூச உற்சவம்
Update: 2024-01-25 10:01 GMT
மேலூர் அருகே முருகனின் ஆறாவது படைவீடாக போற்றக்கூடிய பழமுதிர் சோலையில் உற்சாகமாக நடைபெற்ற தைப்பூச உற்சவம்: தீர்த்தவாரி மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம். மதுரை மாவட்டம் மேலூர் அருகே முருகப் பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படக் கூடிய பிரசித்திப் பெற்ற பழமுதிர் சோலை முருகன் திருக்கோவிலில் தைப்பூச பெருவிழாவையொட்டி தீர்த்தவாரி மற்றும் சிறப்பு அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 11 நாட்கள் நடைபெறும் இந்த தைப்பூச விழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியதை தொடர்ந்து, சுவாமி வள்ளி தெய்வானையுடன் சமேதராக யானை, குதிரை, கிடா, காமதேனு, பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் எழுந்தருளப்பட்டு திருக்கோவில் வளாகத்தில் வலம் வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நேற்று தேரோட்டமும். இன்று தைப் பூச பெருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையொட்டி, நடைதிறக்கப்பட்டு மூலவருக்கு பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, ஆலய உட்புறகாரத்தில் தீவட்டி பரிவாரங்களுடன் மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பின் அஸ்தர தேவர்க்கு ஆறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்கினர். பின் மகா தீபாரதனை நடத்தப்பட்டது. இன்று மாலையில் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகின்றது.