வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
கன்னியாகுமரி மாவட்டம்,ஒருங்கினசேரி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ஒருங்கினசேரி பகுதியை சேர்ந்தவர் குமாரி (67). இவரது கணவர் இறந்துவிட்டார். மகள் திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகிறார். குமாரி கடந்த 17ஆம் தேதி சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார்.இதனால் வீட்டில் யாரும் இல்லை.
நேற்று மாலை குமாரி வீட்டின் பின்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து காணப்பட்டது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. பின்னர் போலீசார் குமாரியிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பீரோவில் 10 பவுன் வைத்திருந்ததாக குமாரி கூறினார்.
இதையடுத்து பீரோவை போலீசார் சோதனை செய்தபோது, ஆனால் பீரோவில் நகைகள் இல்லை. நகைகளை திருடி சென்றிருக்கலாம் என்று தெரிய வந்தது. போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.