கோவிலில் தங்களது உரிமைகளை மீட்டு தரக்கோரி செயல் அலுவலரிடம் மனு
ராசிபுரம் அடுத்த அத்தனூர் அம்மன் கோவிலில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உரிமைகளை மீட்டுத்தரும்படி கோவில் செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற அத்தனூர் அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் உரிமைகளை மீட்டுத்தரும்படி 100க்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினர் திரண்டு வந்து செயல் அலுவலரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் முன்னோர்கள் காலத்திலிருந்து மண்டகபடி மற்றும் கட்டளை இருந்து வந்தது. மேலும் ஐப்பசி மாதம் வண்டி வேடிக்கை, சித்திரை மாதம் எருமை கிடா வெட்டும் உரிமை இருந்து வந்தது. நாளடைவில் கோவில் பராமரிப்பு வேலை நடந்த வந்த நிலையில், பத்து ஆண்டுகளுக்கு திருவிழா நடைபெறமல் இருந்தது. தற்போது கோவில் பணிகள் முடிந்தும் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து விட்டது. ஐம்பசி மாதம் திருவிழா எங்கள் 18 பட்டியில் கொண்டாடி வருவோம். தற்போது ஒரு சமூகத்தைச் சேர்ந்த சிலர் நீங்கள் கோவிலுக்கு வரக்கூடாது, உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை எனக்கூறி கோவிலுக்கு நுழையவிடாமல் தடுத்து வருகின்றனர். எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, தங்களது உரிமையை மீட்டுத்தர வேண்டும் என கூறி ஆயிப்பாளையம் பொதுமக்கள் 100.க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து கோவில் செயல் அலுவலர் சிவகாமியை நேரில் சந்தித்து முற்றுகையிட்டு தங்கள் மனுவை வழங்கி தங்களது குறைகளை கூறியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.