சாலை வசதிக்காக 30 ஆண்டுகளாக போராடும் கிராம மக்கள்
சாலை வசதிக்காக 30 ஆண்டுகளாக போராடும் கிராம மக்கள்? கருணை காட்டுமா வனத்துறை?
By : King 24x7 Website
Update: 2023-12-31 04:11 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியத்தில் வன இலாகாவின் கூடுதல் செயலாளர் அனுமதி அளிக்காததால் மண் சாலை தார்ச்சாலையாக தரம் உயர்த்தப்படாமல் உள்ளது . கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மண் சாலையை தரம் உயர்த்த போராடும் கிராம மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி ஒன்றியம், பெரியநாயகிபுரம் ஊராட்சி, துலுக்க விடுதி வடக்கு கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளான வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க, மருத்துவமனை செல்ல, மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்ல, 500 மீட்டர் தூரத்தில் உள்ள புதுக்கோட்டை சாலை சென்று பேருந்து பிடிக்க, இடையே துலுக்கவிடுதி வடக்கு கிராமத்தில் வன இலாகாவுக்கு சொந்தமான முந்திரிக்காடு உள்ளதால், 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலை இருந்து வந்தது. கடந்த 1991 ஆம் ஆண்டில் ஏற்கனவே இருந்த முந்திரிக் காட்டை அழித்துவிட்டு, புதிதாக முந்திரிச் செடிகள் நடுவதற்கு பணிகள் நடந்த போது, கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வனத்துறை அனுமதியோடு 90 ஏக்கர் பரப்பளவு உள்ள முந்திரிக்காட்டில், துலுக்கவிடுதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தார்ச்சாலை வரை மண் சாலை அமைக்கப்பட்டது. மழை பெய்யும் நேரங்களில் மண் சாலை சேதம் அடைந்து சேறும், சகதியுமாக போக்குவரத்திற்கு பயனற்று போய் விடுவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். எனவே, மண் சாலையை தெருவிளக்கு வசதியுடன் கூடிய தார்ச் சாலையாக மாற்ற வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அரசுக்கும், வனத்துறைக்கும் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு சென்னை தலைமை வன பாதுகாவலர் உத்தரவின் பேரில், மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர்கள் கள ஆய்வு செய்து, இறுதியாக அரசு வனத்துறை கூடுதல் செயலாளரின் அனுமதிக்காக கோப்பு நிலுவையில் உள்ளது. இது குறித்து துலுக்கவிடுதி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமநாதன் கூறியதாவது, "கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மண் சாலையை தெருவிளக்குடன் கூடிய தார்ச் சாலையாக மாற்றுவதற்காக போராடி வருகிறோம். ஊராட்சி தீர்மானம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் அனுமதி, மாவட்ட, மண்டல வனத்துறையினரின் கள ஆய்வுக்குப் பின், சென்னை தலைமை வனப்பாதுகாவலர் மாநில அரசின் கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கிட கடந்த மார்ச் 9 ஆம்தேதி பரிந்துரை செய்து, அரசு கூடுதல் செயலாளருக்கு அனுப்பி, அதன் தொடர்ச்சியாக மாநில அரசால் எழுப்பப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்தும், அரசு கூடுதல் செயலாளர் அனுமதி அளிக்காமல் உள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது. துலுக்கவிடுதி வடக்கு கிராம மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த சாலை பயனுள்ளதாக இருக்கும். எனவே, அரசு கூடுதல் செயலாளர் உடனடியாக சாலை மேம்பாடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும்" என்றார்.