குடிநீர் குழாய் உடைப்பு: இடிந்து விழுந்த வீட்டின் சுவர்!
பொன்னமராவதி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட நிலையில், மூன்று மாதங்களாக சரி செய்யப்படாததால், அருகே இருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
பொன்னமராவதி அருகே மூன்று மாதங்களாக சரி செய்யப்படாத குடிநீர் குழாய் உடைப்பு. ஊராட்சி மன்ற தலைவரின் அலட்சியத்தால் இடிந்து விழுந்த வீட்டின் சுவர். குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மறவாமதுரை ஊராட்சியில் உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இது குறித்து ஈச்சம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டும் எந்த பலனும் ஏற்படவில்லை.
இந்நிலையில் குடிநீர் குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீரினால் அருகில் இருந்த வீட்டின் சுவர் ஊறியதால் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. உடைந்து போன குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளதோடு அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே ஈச்சம்பட்டி கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.