ஆனந்தவல்லி வாய்க்கால் சாலை சீரமைக்கப்படுமா?

பேராவூரணி - ஆவணம் செல்லும் ஆனந்தவல்லி வாய்க்கால் சாலை சீரமைக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-12-19 15:48 GMT

பேராவூரணியில் இருந்து ஆனந்தவல்லி வாய்க்கால் வழியாக ஆவணம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கடைவீதியில் இருந்து ஆவணம்  கல்லணை கால்வாய் வாய்க்கால் செல்லும் வரை, சுமார் 10 கிலோமீட்டர் தூரம் ஆனந்தவல்லி வாய்க்கால் உள்ளது.

இதன் ஒரு கரையில் பேராவூரணியிலிருந்து பொன்னாங்கண்ணிக்காடு, மாவடுகுறிச்சி, பழைய நகரம், அரசலங்கரம்பை வழியாக ஆவணம் செல்லும் சாலை உள்ளது.  இதன் ஒருபுறம் அம்மையாண்டி செல்லும் சாலையும், மற்றொருபுறம் சிவன் குறிச்சி செல்லும் சாலையும் உள்ளது. இந்த சாலையில் இருபுறமும் பல நூறு ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. 

மேலும், பேராவூரணியில் இருந்து ஆவணம் செல்வதற்கு இந்த சாலையை வாகன ஓட்டிகள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பேராவூரணியில் இருந்து மாவடுகுறிச்சி வரை சாலை ஓரளவு போக்குவரத்துக்கு உகந்ததாக உள்ளது.  மாவடுகுறிச்சியிலிருந்து அரசலங்கரம்பை வரை சாலை குண்டும்குழியுமாக உள்ளது. மேலும், கப்பிகள் பெயர்ந்து சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மேலும், சாலையின் இருபுறமும் புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாதபடி ஒத்தையடிப் பாதையாக மாறி விட்டது. இதன் காரணமாக இந்த பகுதியில் மாட்டுவண்டிகள், கதிர் அறுக்கும் இயந்திரங்கள், டிராக்டர் ஆகியவை செல்ல முடியாத சூழல் உள்ளது.  இந்த சாலையை சீரமைத்து தந்தால், ஆவணம் செல்ல மாற்றுச் சாலையாகவும் அமையும். மேலும், விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல ஏதுவாகவும் இருக்கும். இதனால், பொதுமக்கள், விவசாயிகள் பயனடைவர். 

எனவே, "மாவடுகுறிச்சியில் இருந்து அரசலங்கரம்பை வரை உள்ள சேதமடைந்த சுமார் 4 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும்" என இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News