உலக சிட்டுக்குருவி தின கலந்துரையாடல்
உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் கருத்தரங்கு நடைபெற்றது.
உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக நான் சிட்டுக்குருவியை நேசிக்கிறேன் என்ற மையகருத்தை வழியுறுத்தி கல்லூரி வளாகத்தில் சிட்டுக்குருவி தின கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார், சிறப்பு விருந்தினராக பறவை ஆர்வலர்கள் கீதாமணி மற்றும் முருகவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
அவர்கள் பேசுகையில், அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது, புழுக்களை உண்டு வாழ்வதால் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை சிட்டுக்குருவி, மனிதர்கள் அதிகமாக வாழும் இடத்தில் வாழ்ந்த பறவை தற்போது இல்லாமல் போனதற்கு காரணம் செல்போன் டவர்கள் அல்ல, நகரமயமாதல் என்ற பெயரில் சிட்டுக்குருவியின் வாழ்விடங்கள் இல்லாமல் போனதே இதற்குக் காரணம், தற்போது கிராமப்புறங்களிலும், வயல்வெளிகளிலும் மட்டுமே இவற்றை காணமுடிகிறது, மற்ற பறவைகள் போல் இவற்றிற்கு கூடு கட்டி வாழ தெரியாது.
வீடுகளில் உள்ள பொந்துகளிலும், ஓடுகளுக்கு அடியிலும், புதர்களிலும் சிறு சிறு பொருட்கள் மற்றும் வைக்கோலை வைத்து கூடுகட்டி முட்டையிடும், அதன் குஞ்சுகளுக்கு பெரும்பாலும் புரதம் நிறைந்த புழுக்களை மட்டுமே முதல் ஐந்து நாட்களுக்கு தாய் பறவை ஊட்டும், நகர்ப்புறங்களில் செடி கொடிகள், புதர்கள் இல்லாமல் போனதால் அவைகளால் குஞ்சுகளுக்கு உணவளிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது, தானியங்களை உணவாக உட்கொள்ளும் சிட்டுக்குருவி நெகிழிப் பைகளில் தானியங்கள் வருவதால் இவற்றிற்கு தானிய உணவுகளும் கிடைப்பதில்லை, அனைவரும் தங்களது வீட்டில் தானிய உணவு பொருட்கள், தண்ணீர் ஆகியவற்றை சிறிய மண் சட்டியில் வைத்தால் சிட்டுக்குருவிகள் உயிர் வாழும், சிட்டுக்குருவியின் வாழ்விடங்களை உருவாக்கினால் மட்டுமே அவற்றை நம்மால் பாதுகாக்க முடியும் என்றனர்.
மாணவர்களிடம் கேள்விகளை தொடுத்து சரியாக பதில் சொன்னவர்களுக்கு செயற்கை சிட்டுக்குருவி கூண்டுகளும், சிட்டுக்குருவி படங்களும் பரிசாக வழங்கினார்கள். பிறகு, மாணவ செயலர்கள் சுந்தரம், செர்லின், கவியரசு, ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிட்டுக்குருவி கூண்டை எவ்வாறு செய்வது என்பதை கற்றுக்கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.