எங்களுடன் இன்னும் சில கட்சிகள் வர உள்ளன: எடப்பாடி பழனிசாமி
எங்களுடன் இன்னும் சில கட்சிகள் வர உள்ளன என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
eps
வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். சுற்றுப்பயணத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “ஆம்பூரில் தோல் தொழிற்சாலைகள், ஷூ உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகம். திமுக ஆட்சி வந்த பிறகு, பல தொழிலாளிகளுக்கு வேலையில்லா சூழல் ஏற்பட்டுவிட்டது. அதிமுக ஆட்சி ஏற்பட்டதும், சரிந்த இந்த தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விலைவாசி உயர்வால் இன்று ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் விலைவாசியை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். அதிமுக வென்றால் சிறுபான்மையினருக்கு எதிரான சூழல் உருவாகும் என திமுக பொய் பிரச்சாரம் செய்கிறது. 2011 - 2021 வரை சிறுபான்மையினருக்கு அரணாக இருந்தது அதிமுக அரசு. அதிமுக ஆட்சி செய்த 31 ஆண்டுகளும், சிறுபான்மையினருக்கு எதிராக சாதிச் சண்டை, மதச் சண்டை ஏற்படவில்லை. இன்றைக்கு சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளது. தினமும் கொலை, கொள்ளைகள் நடக்கிறது. 2011 முதல் ரமலான் நோன்புக் கஞ்சி தயாரிக்க, 5,400 மெட்ரிக் டன் அரிசி கொடுத்தது அதிமுக அரசு. நாகூர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கு விலையில்லா சந்தனக் கட்டைகளை வழங்கியது அதிமுக அரசு. ஹஜ் பயணத்திற்கான மானியத்தை மாநில அரசு தரப்பிலேயே வழங்கினோம். திமுக தலைவரும், அதன் கூட்டணித் தலைவர்களும், அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைத்துவிட்டதால், சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார்கள். அதிமுக சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி. அது எங்கள் தலைவர்கள் வகுத்த பாதை. எங்களுடன் இன்னும் சில கட்சிகள் வர உள்ளன. இந்த கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும். அதிக இடங்களில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும். அதனால் தவறான தகவல்களை சிறுபான்மையின மக்கள் நம்ப வேண்டாம்” என்றார்.