கட்சி தொடங்கிய உடனே ஆட்சிக்கு வரமுடியாது; முதலில் உழைக்கணும்: விஜய்க்கு ஈபிஎஸ் அறிவுரை

கட்சி தொடங்கிய உடனே ஆட்சிக்கு வரமுடியாது என தவெக தலைவர் விஜய்யை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.;

Update: 2025-08-22 06:16 GMT

edapadi

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அப்பகுதி மக்கள் பூசணி சுற்றி வரவேற்பு அளித்தனர். இளைஞர்கள் பலர் ஆரவாரத்தோடு அவரை வரவேற்றனர். பின்னர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “பிரச்சாரம் முடிந்து வீடு திரும்பிய அதிமுக தொண்டர் தங்கராஜ், சாலை விபத்தில் உயிரிழந்ததை கேட்டு வருந்தினேன். அவரது குடும்பத்தினருக்கு கட்சி சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும். அதிமுக யார் கையில் இருக்கிறது என்று ஒரு தலைவர் கேட்கிறார். இது கூட தெரியாமல் ஒருத்தர், ஒரு கட்சியின் தலைவராக இருந்தால், எப்படி அந்த கட்சியில் தொண்டர்கள் இருப்பார்கள்? விஜய் அறியாமையில் பேசுகிறார். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே, சிலர் அரசியல் செய்கிறார்கள். எடுத்த உடனேயே யாரும் முதல்வர் ஆக முடியாது. கட்சி தொடங்கிய பின், 5 ஆண்டுகள் உழைத்து முதல்வர் ஆனார் எம்ஜிஆர். பேரறிஞர் அண்ணா நாட்டு மக்களுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தார். புரட்சித் தலைவி அவர்களும் மக்களுக்காக உழைத்ததால் முதல்வர் ஆனார். சில பேர் கட்சி ஆரம்பித்த உடன், டயலாக் பேசுகிறார்கள். மக்கள் செல்வாக்கு உள்ளது போலவும், அவர்கள் தான் நாட்டை காப்பாற்ற உள்ளது போலவும் அடுக்குமொழியில் சிலர் பேசுகிறார்கள். உழைக்க வேண்டும். நாங்கள் ஊழைப்பால் தான் உயர்ந்துள்ளோம். எடுத்த உடனேயே எல்லாம் கிடைக்க வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள். உழைத்தால் தான் கிடைக்கும். ஒரு செடி வைத்து, அதை நன்கு கவனித்துக் கொண்டால் தான், அது மரமாகும். மக்களுக்கு சேவை செய்தால் தான், பொறுப்பு தேடி வரும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். இன்று யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் அவர்கள் சாதித்தது என்ன? பல்வேறு படங்களில் நடித்து, அதன்மூலமான வருமானத்தில், திரைத்துறையில் இருந்து ஓய்வு பெறும் நேரத்தில் அரசியல் கட்சி தொடங்கி, களத்திற்கு வந்தவர்கள் நாங்கள் அல்ல. கொரோனா காலத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக, திறம்பட ஆட்சி செய்தது அதிமுக. அதேபோல, 2026ல் வென்று, அதிமுக தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். அன்று அதிமுக செய்தது போல, இன்று ஆன்லைன் சூதாட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. திமுகவை வீழ்த்தக்கூடிய ஒரே கட்சி அதிமுக தான். தமிழகத்தை அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி அதிமுக. பொன்விழா கண்ட இயக்கம் அதிமுக. அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது. புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியின் உழைப்பால் உயர்ந்த இயக்கம் அதிமுக என்றார்.

Similar News