பேட்ச் வொர்க் மாடல் அரசு தான் திமுக அரசு: அண்ணாமலை
கடந்த கால சாதனைகளுக்கு பேட்ச் வொர்க் செய்து தொழிற்துறை வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமைப்படுகிறார் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.;
annamalai
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “திராவிடத்தால் வாழ்கிறோம்! திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்! திரு. அமித் ஷா முதல் திரு. பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில்' இதோ! சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் - போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது! திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்!” எனக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து கருத்து கூறியுள்ள அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “கடந்த கால சாதனைகளுக்கு பேட்ச் வொர்க் செய்து தொழிற்துறை வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமைப்படுகிறார். கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு விகிதம் உயரவில்லை.கடந்த நிதி ஆண்டில் உத்தரப்பிரதேசத்தின் வேலைவாய்ப்பு 1.2% உயர்ந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் வேலைவாய்ப்பு விகிதம் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2020-21 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ்நாட்டின் வேலவாய்ப்பு விகிதம் ஒரே அளவாக உள்ளது. 2020-21 ஆம் ஆண்டைப் போலவே 2023-24 ஆம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு பங்கு அப்படியே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் தொழில்துறை தொழில்முனைவோர் குறிப்பாணை மூலம் பெறப்பட்ட முதலீடுகளில் தமிழ்நாட்டின் நிலை என்னவென்று முதல்வருக்குத் தெரியுமா? தமிழ்நாடு எதிர்காலம் குறித்த தொலைநோக்கை இழந்துவிட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.