அதிமுக கூட்டணி வலிமையாக இருக்கும்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக கூட்டணி வலிமையாக இருக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2025-09-04 04:07 GMT

EPS

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, “மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக தொடர்ச்சியான வெற்றியை பெற்றுள்ளது. இந்த தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை. மதுரை மாநகராட்சி ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும், 2026ல் அதிமுக ஆட்சி அமைந்த உடன் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மாநகராட்சி ஊழலுக்கு திமுக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். திமுக ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம், கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. திமுக ஆட்சியில் கிராமம் முதல் நகரம் வரை போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்றுவருகிறது. நமது குழந்தைகள் நம் கண் முன்னே அழிந்து போகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. திமுக 4 ஆண்டு கால ஆட்சியில் வீடு கட்டுமான பொருட்களான சிமெண்ட், ஜல்லி என அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளது. இது தான் திமுகவின் சாதனை. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு என்றால், அது திமுக தலைமையிலான அரசு தான். அதிமுக கூட்டணி வலிமையாக இருக்கும். 2026 தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்றதாக முதல்வர் பொய் கூறுகிறார் என்றார்.

Similar News