ஓபிஎஸ், தினகரன் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன்: அண்ணாமலை
என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ள தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் தங்களின் முடிவை மறு பரிசீலனை செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.;
annamalai
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ரோட்டரி சங்கம் தியாகராய நகர் சார்பில் பிரபல பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியத்திற்கு சிறந்த கலைஞர் விருது வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “டிடிவி தினகரனிடம் பேசினேன். அவர் முக்கியமான தலைவர். 2024 தேசிய ஜனநாயக கூட்டணியில் மிக முக்கிய தலைவராக இருந்தார். தமிழக அரசின் நீண்ட நெடிய பயணத்தை பார்த்தவர், நிறைய உயரத்தை பார்த்தவர், நிறைய பிரச்சனைகளை சந்தித்தவர். டிடிவி தினகரனிடம் தொலைபேசி மூலமாக வேண்டுகோள் விடுத்தேன். அவருடைய முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். 2026 தேசிய ஜனநாயக கூட்டணியின் இலக்கு என்பது மக்களுக்கு நல்ல ஒரு வித்தியாசமான தொலைநோக்கு பார்வை இருக்கக்கூடிய சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ஆட்சியை கொடுக்க வேண்டும். அதனால் உங்களுடைய முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்ணன் டிடிவி தினகரனிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறேன். அதை அவர் பரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாம் தேவையில்லாத சில விஷயங்களை குழப்பிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணி விரிவுபடுத்தப்பட்டபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார் என்று தெளிவாக சொன்னார். தமிழகத்திற்கு நிறைய நேரம் கொடுத்து வருகிறார் அமித்ஷா. பாஜகவின் மூத்த தலைவர்களை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து பேசி வருகிறார். அமித்ஷா மிக உறுதியாக இருக்கிறார், 2026-ல் தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும். எந்த தேவையில்லாத குழப்பமும் வேண்டாம், தமிழகத்தில் நிச்சயமாக மாற்றம் நடக்கும். அண்ணன் டிடிவி தினகரனும் ஓபிஎஸ்-ம் தங்கள் எடுத்திருக்கக்கூடிய மறுபரிசீலை செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 2024 எந்த சீட்டும் வேண்டாம் என்று கூட்டணிக்கு வந்தார் டிடிவி தினகரன். ஓ.பன்னீர்செல்வம் சாதாரண அரசியல்வாதி கிடையாது, ஒரு தேர்தலில் சின்னம் இல்லாமல் சுயேச்சை வேட்பாளராக இந்தியாவில் எத்தனை பேர் போட்டியிட்டு இருப்பார்கள்? எனக்குத் தெரிந்து இந்திய அரசியல் வரலாற்றில் யாரும் கிடையாது. பிரதமர் நரேந்திர மோடியின் மீது இருக்கக்கூடிய அன்பிற்காக ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். பெரிய உள்ளம் கொண்டவர்கள், நல்ல மனிதர்கள். நிச்சயம் மறுபரிசீலனை செய்வார்கள். டிடிவி தினகரனின் சில கருத்துக்களுக்கு நான் பதில் சொல்வது சரியாக இருக்காது. ஜிகே மூப்பனார் நினைவு தினத்தன்று ஜிகே வாசன் டிடிவி தினகரனிடம் தொலைபேசி மூலமாக பேசினார். அதனால் பிரச்சனை எங்கேயும் கிடையாது, நிகழ்ச்சிக்கு கூப்பிடவில்லை அப்படி இல்லை, அது கூட சரி செய்யப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி வலிமை அடைந்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். எல்லோரும் வேலை செய்கிறார்கள், பாஜக பூத்தை பலப்படுத்தி வருகிறது. சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தால் கூட அதெல்லாம் களையப்படும் என்பது என்னுடைய நம்பிக்கை. தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள் இருக்கிறார்கள். தொலைநோக்கு பார்வையில் திமுக தலைமையில் இருக்கக்கூடிய இந்தி கூட்டணி தமிழகத்திலிருந்து அகற்ற வேண்டும்” என்றார். பாஜகவில் சில சலசலப்புகள் இருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்த கருத்து தொடர்பான கேள்விக்கு? பதிலளித்த அண்ணாமலை, “நான் அரசியலில் சில விஷயங்களை கடந்து செல்லக்கூடிய ஒரு மனிதன். மாற்றம் வேண்டும் என்று நிற்கிறேன், நாம் செய்யக்கூடிய சில வேலைகள் வித்தியாசமாகத்தான் இருக்கும் கட்சி, அங்கீகாரம் மரியாதை கூட இருக்கக் கூடிய தொண்டர்கள் இருக்கிறார்கள். இதில் சில தலைவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். அவர்களுடைய பார்வை வித்தியாசமாக இருக்கலாம். பேசுவதற்கு உரிமை உள்ளது. அரசியலில் இருந்தால் நான்கு பேர் நல்லவன் என்று சொல்வார்கள், நான்கு பேர் கெட்டவன் என்று சொல்வார்கள். கெட்டவன் என்று சொல்பவர்களிடம் நான் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் என்னுடைய நேரம் கழிந்து விடும், இதையெல்லாம் கடந்து செல்வோம். இதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என்றார்.