அதிமுக செய்த சாதனைகள்; பட்டியல் போட்ட இபிஎஸ்!!

அதிமுக செய்த சாதனைகளை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார்.;

Update: 2025-09-13 13:25 GMT

EPS

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கிரிக்கெட் வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் விளையாட்டு ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது என்றார். உடல் கட்டுக்கோப்பாக இருக்கவும், மன அழுத்தம் குறையவும் விளையாட்டு அவசியம் என்று குறிப்பிட்டார். விளையாட்டு வீரர்கள் பல தடைகளை தாண்டி மன உறுதியுடன் இருப்பார்கள். அவர்கள் விளையாட்டில் முழு கவனத்துடன் எதிரணியை வீழ்த்த தயாராக இருப்பார்கள் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். அதிமுக ஆட்சியில் கிராமங்கள் தோறும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டன. இளைஞர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன. விளையாட்டு வீரர்கள் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற 3% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது அதிமுக அரசின் சாதனை என்று எடப்பாடி பழனிச்சாமி பெருமிதத்துடன் கூறினார். மேலும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக முதல்வர் கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. சர்வதேச அளவில் திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்க விளையாட்டு விடுதிகள் கட்டப்பட்டன. வீரர்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து தொகை மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டது. சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டது என்று அவர் பட்டியலிட்டார். எஸ்.பி. வேலுமணி குறிப்பிட்டது போல, விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க அதிமுக தயாராக உள்ளது. ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும். கிராமம் முதல் நகரம் வரை விளையாட்டு உபகரணங்கள் அரசாங்கமே வழங்கும். இந்த அரசாங்கம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது. ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். 

Similar News