எங்கே போகிறது தமிழ்நாடு...?? தமிழ்நாட்டில் கஞ்சா ஆம்லெட் விற்பனை; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!!

தமிழகம் போதைப்பொருள் விற்பனையால் சீரழிந்து கிடக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2025-09-22 06:30 GMT

EPS

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் நேற்று நடந்த பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, தி.மு.க. அரசு ஆட்சியில் 67 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மதுரையில் மேயர் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சீபுரம், திருநெல்வேலி மேயர்களுக்கும், கவுன்சிலருக்கும் சண்டை இருந்து வருகிறது என்றார். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது. கஞ்சா சாக்லேட் வந்து விட்டது. ஆம்லெட்டில் கூட கஞ்சா ஆம்லெட் வந்து விட்டது என கூறுகிறார்கள். தமிழகம் போதைப்பொருள் விற்பனையால் சீரழிந்து கிடக்கிறது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில் இதுபற்றி சட்டசபையில் நான் பலமுறை பேசினேன். ஆனால், அவற்றை எல்லாம் அப்போது கண்டுகொள்ளாத முதல்-அமைச்சர் இப்போது தாமதமாக விழித்து கொண்டு இருக்கிறார். மூன்றரை ஆண்டுகள் கழித்து இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று ஞானம் பிறந்தது போன்று உரையாற்றுகிறார். இப்படிப்பட்ட தாமதமாக விழித்து கொள்ளும் முதல்-அமைச்சர் நமக்கு தேவையா?’ என்று ஆவேசத்துடன் பேசினார். தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. அது உண்மைதானே... என பொதுமக்களை நோக்கி கேட்டார். தொடர்ந்து அவர், கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா விற்காத இடங்களே இல்லை என்ற அளவில் அது அதிகரித்து காணப்படுகிறது. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கஞ்சாவை உபயோகித்து சீரழியும் நிலை காணப்படுகிறது என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறினார்.

Similar News