அமித்ஷா சொல்லிதான் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார்: சபாநாயகர் அப்பாவு
நடிகர் விஜய் சினிமாவில் பேசுவது போல் பேசுகிறார், அகந்தை அதிகமாக இருக்கிறது என சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.;
appavu
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சபாநாயகர் அப்பாவு, “அமித்ஷா சொல்லி ஆனந்த் மூலம் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அதனால்தான் அவருக்கு தனி விமானம், Y பிரிவு பாதுகாப்பு எல்லாம் விஜய்க்கு கொடுத்துள்ளனர். சினிமாவில் பேசுவது போல் பேசுகிறார். அவருக்கு கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது. ஒன்றிய அரசே சிலரைக் கட்சி தொடங்க வைத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது. அமித்ஷா குஷ்பூ மற்றும் ஆனந்த் ஆகியோரிடம் இது தொடர்பாக பேசியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. முதலமைச்சரை மிரட்டும் தொனியில் அவர் பேசும்போதே விஜய்யை பாஜக தான் இயக்குகிறது என்பது தெளிவாக தெரிகிறது. பிரதமருக்கு இருக்கும் புரோட்டாக்கால் வேறு விஜய்க்கான புரோட்டாக்கால் வேறு. பிரதமர் மற்றும் முதல்வர் பற்றி பேசும்போது கண்ணியத்துடனும் வார்த்தைகளை பயன்படுத்தும் போது கவனத்தொடனும் இருக்க வேண்டும். பயப்படுபவர்களுக்குத்தான் பயம் வர வேண்டும். தமிழ்நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படவில்லை. இவர்களைப் போல தலைவா பட பிரச்சனைக்காக மூன்று நாட்கள் கொடநாட்டில் காத்திருந்து காலில் விழுந்தவர்கள் நாங்கள் அல்ல. ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் சலுகை கிடைத்திருப்பதால் மக்கள் சேமிப்பு உருவாகும் என பிரதமர் கூறியுள்ளார். அப்படியானால் இத்தனை ஆண்டுகள் சேமித்த 20 லட்சம் கோடி ரூபாயை அவர் எங்கே வைத்திருக்கிறார். ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்க வேண்டும். மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை அணுக கூடாது. கவர்னர் எதைப்பற்றியும் தெரியாமல் யாரோ எழுதிக் கொடுப்பதை பேசுகிறார் என்றார்.