ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்து: தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு!!
ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.;
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, கவர்னர் மாளிகையில் அனைத்து கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைக்க இருக்கிறார். இதனை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுக்கும். இந்நிலையில், தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நீடித்து வருகின்றன. ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்றது முதல் தமிழக அரசின் கொள்கைகளுக்கும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் எதிராகச் செயல்பட்டு வருவதாகவும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வது மற்றும் அவற்றை முடக்கி வைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும், ஆளுநர் மாளிகை ஒரு அரசியல் அலுவலகம் போலச் செயல்படுவதாகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக ஆளுநர் கருத்துக்களைக் கூறி வருவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதனைடுத்து, இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மக்களால் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் குடியரசு தினத்தன்று வழங்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து திமுகவின் மற்ற தோழமைக் கட்சிகளான விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் மதிமுக ஆகியவையும் இந்தத் தேநீர் விருந்தைப் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.