கட்டுப்பாடிழந்த அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த மருத்துவர் குடும்பத்திற்கு ரூ.2 கோடி வழங்குக: சீமான்
அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்குத் துயர்துடைப்புத்தொகையாக 2 கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.;
சீமான்
அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்குத் துயர்துடைப்புத்தொகையாக 2 கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்டுப்பாடிழந்த அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்புத்தொகை வழங்காமல் அலைக்கழிக்கும் திமுக அரசின் கொடும்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் தம்பி மணிக்குமார் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை பணியின் போது மருத்துவமனைக்கு அருகில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து ஒன்று மோதிய விபத்தில் சிக்குண்டு உடல் நசுங்கி, அதே இடத்திலேயே உயிரிழந்தார் எனும் துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மருத்துவர் தம்பி மணிக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய மருத்துவத்துறையினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். இதே விபத்தில் சிக்குண்டு படுகாயத்துடன் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவுடன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் தம்பி பிரவீன் அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன். இது யார் குற்றம்? சாலையில் நடந்து சென்றது குற்றமா? தரமற்ற பழுதடைந்த அரசுப் பேருந்துகளை சாலையில் பயணிக்க விட்டு, மக்களின் உயிர்களைப் பறிக்கும் அரசின் குற்றமா? அரசின் அனைத்து துறைகளிலும் மலிந்துபோயுள்ள ஊழலால் அரசு நிர்வாகம் முற்று முழுதாகச் சீர்கெட்டு நிகழும் இதுபோன்ற விபத்துகளுக்குக் கூட தார்மீகப் பொறுப்பேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய துயர்துடைப்பு உதவிகள் வழங்க மறுக்கும் திமுக அரசின் செயல் கொடுங்கோன்மையின் உச்சமாகும். கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம், துடையூர் அருகே சுரங்கப் பாதையில், மழை வெள்ளம் தேங்கியது குறித்து எவ்வித முன்னெச்சரிக்கை அறிவிப்புப் பலகையும் தடுப்பும் வைக்கப்படாத நிலையில், மகிழுந்தில் சென்ற அரசு பெண் மருத்துவர் தங்கை சத்யா அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அதேஆண்டு, டிசம்பர் மாதம் மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராகப் பணியாற்றிவந்த மருத்துவர் தம்பி கார்த்திகேயன் அவர்களின் மகிழுந்தை பரம்புபட்டி அருகே திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி மிக மிஞ்சிய வேகத்தில் சென்ற அரசுப் பேருந்து ஒன்று வேகமாக உரசி ஒதுக்கித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்ற காரணத்தினால், விபத்து ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே மருத்துவர் கார்த்திகேயன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இந்த இரண்டு அரசு மருத்துவர்களுக்கும் உரிய துயர்துடைப்புத் தொகையை இன்றளவும் வழங்காது காலந்தாழ்த்தி வருகின்றது திமுக அரசு. மதுபோதை மீதான வெறியில் சட்டத்திற்குப் புறம்பாகக் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் துயர்துடைப்பு தொகையாக மக்கள் வரிப்பணத்தில் இருந்து ரூபாய் 10 இலட்சத்தை அள்ளித் தந்து, அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்கும் இந்த 'திராவிட மாடல்' திமுக அரசு, மக்களின் உயிர்க் காக்கும் உன்னதப் பணியாற்றும் மருத்துவர்கள், அரசின் அலட்சியத்தால் நிகழும் விபத்துகளில் சிக்குண்டு உயிரிழந்தால் கூட அவர்களின் குடும்பத்திற்கு எவ்வித துயர்துடைப்பு உதவிகளையும் வழங்கமறுப்பது வெட்கக்கேடு. அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையை 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்று அரசியல் விளம்பரத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளும் முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், அரசு மருத்துவர்களின் நலன் காக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது எப்போது? மக்களுக்கு நோயற்ற வாழ்வளிக்க அரும்பணியாற்றும் அரசு மருத்துவர்களின் நல்வாழ்வைப் பாதுகாக்க வேண்டியதும், பேரிழப்புகளின் போது அவர்களின் குடும்பத்திற்கு உற்ற துணையாக நிற்க வேண்டியதும் ஆளும் அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும். எனவே, இனியும் காலம் கடத்தாமல் தமிழ்நாடு அரசு உயிரிழந்த மூன்று அரசு மருத்துவர்களின் குடும்பங்களுக்கும் இரண்டு கோடி ரூபாய் வீதம் துயர்துடைப்புத் தொகை வழங்க வேண்டும் எனவும், அவர்களது குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், படுகாயமடைந்த மருத்துவர் தம்பி பிரவீனுக்கு உரிய மருத்துவச் சிகிச்சையும், துயர் துடைப்பு நிதியும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.