எங்கள் கூட்டணி இவர்களோடு தான்..! ஜன.9ல் அறிவிப்பை வெளியிடும் தே.மு.தி.க!!
யாருடன் கூட்டணி என்பது குறித்து தே.மு.தி.க ஜன.9ல் அறிவிப்பை வெளியிடுகிறது.;
சென்னை - கோயம்பேடில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில், மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், வரும் 9ம் தேதி, கடலுாரில் நடக்க உள்ள, 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.O' ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர்கள் என, மாவட்ட செயலர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் தங்கள் கருத்தை, கடிதத்தில் எழுதி, அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் செலுத்தலாம் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள், தங்கள் கருத்தை எழுதி, பெட்டியில் போட்டனர். பின்னர், கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா அளித்த பேட்டியில், சட்டசபை தேர்தலில், யாருடன் கூட்டணி வைக்கலாம் என, மாவட்ட செயலர்களின் கருத்து கேட்கப்பட்டது. பெட்டியில் மாவட்ட செயலர்கள், கடிதம் வாயிலாக தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். அந்தக் கருத்துக்களின் அடிப்படையில், வரும் 9ம் தேதி கடலுாரில் நடக்கும் மாநாட்டில், எங்கள் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும். அது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தேர்தலையொட்டி நிறைய அறிவிப்புகள் வரும். தமிழகத்தில் நான்கு முனை கூட்டணி உள்ளது. இதை தாண்டி இன்னொரு கூட்டணி வருமா எனத் தெரியாது. அனைத்து கட்சிகளும், தே.மு.தி.க., வுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றன. உரிய நேரத்தில், சரியான முடிவை அறிவிப்போம். அடுத்து வரும் ஆட்சியில், கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வாய்ப்பு உள்ளது. தி.மு.க., ஆட்சியை அகற்ற, ஒருமித்த கருத்துகளைக் கொண்ட கட்சிகள் இணைய வேண்டும் என, பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அதை, யார் ஏற்றுக் கொள்கின்றனர், யார் ஏற்கவில்லை என்பதற்கான விடை, கூட்டணி அமையும் போது மக்களுக்கு தெரியும் என்று கூறினார்.