எடப்பாடி மீது அமித் ஷா கோபம்.. விஜய் பக்கம் திரும்பும் பாஜக?

எடப்பாடி மீது அமித் ஷா கோபம்.. விஜய் பக்கம் திரும்பும் பாஜக?;

Update: 2026-01-06 04:40 GMT

எடப்பாடி மீது அமித் ஷா கோபம்.. விஜய் பக்கம் திரும்பும் பாஜக? பொங்கலுக்கு வர போகுது மிக பெரிய மாற்றம்

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்குள் பல ட்விஸ்ட்கள் நடக்கும் என்றே தெரிகிறது. இந்த தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட போதிலும், அங்குப் பல டிராமா தொடர்ந்து நடந்தே வருகிறது. இதற்கிடையே விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜக தீவிரமாக முயல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் எப்படியாவது தனது இருப்பை வலுப்படுத்த வேண்டும் என நினைக்கும் பாஜக, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளில் திரைமறைவில் இறங்கியுள்ளது. அதற்காக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கத் தீவிர முயற்சிகளை எடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசியிருந்தார். அப்போது கூட அவர் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெறுமன போட்டியிட்டோம் என இருக்கக்கூடாது வெற்றி பெறுவது முக்கியம் என்பதைத் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

கடந்த 2021ல் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்றது. 2024 லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட போது ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. இப்போது 2026 தேர்தலுக்கு மீண்டும் அவர்கள் அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

அதிருப்தி

ஆனால், தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகள் பிரிந்து இருக்கிறது. ஓபிஎஸ், டிடிவி தரப்பு ஒரு பக்கம் தனியாக உள்ள நிலையில், விஜய்யின் தவெக கட்சியும் தனியாக இருக்கிறது. மற்ற கட்சிகளை ஒரே கூட்டணியின் கீழ் எடப்பாடியால் கொண்டு வர முடியாததால் அமித் ஷா அதிருப்தியில் இருக்கிறாராம். இதன் காரணமாகவே தமிழகத்திற்கு வந்த போதும் எடப்பாடி பழனிசாமியை அமித் ஷா சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது..

அதிலும் குறிப்பாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைக் கூட்டணிக்குள் கொண்டு வருவதில் பாஜக தீவிரமாக இருக்கிறது.. கடந்த வாரம் தான் தவெக தரப்பு காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சுகள் அதிகரித்த நிலையில், விஜய் கட்சி உடனான கூட்டணிக்கான முயற்சியை பாஜக தீவிரப்படுத்தியுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தவெக சொல்வது என்ன!

இது குறித்துப் பேசிய தவெக தரப்பு கூறுகையில், "மதச்சார்பின்மை மற்றும் மதவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில், காங்கிரஸும் தமிழக வெற்றிக் கழகமும் இயற்கையான கூட்டணிக் கட்சிகள். ராகுல் காந்தியும் எங்கள் தலைவரும் (விஜய்) நண்பர்கள்தான். காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையின் தனிப்பட்ட நலன்கள் காரணமாக தவெக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்காமல் இருக்கிறது" என்றார்.

அமித் ஷா திட்டவட்டம்

தவெகவின் இந்தக் கருத்தால் தான் பாஜக விஜய்யை கூட்டணிக்குள் சீக்கிரம் கொண்டு வர அவசரம் காட்டத் தொடங்கக் காரணமாக இருக்கிறது. தேர்தல் கூட்டணிகள் என்பது வாக்கு விகிதம், கணக்கீடு அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர சென்டிமென்ட் அடிப்படையில் இருக்கக்கூடாது என அமித் ஷா நிர்வாகிகள் கூட்டத்தில் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், 2026 தேர்தல் என்பது திமுக கூட்டணி vs என்டிஏ கூட்டணி என மட்டுமே இருக்க வேண்டும்.. வாக்குகள் பிரிவதை அனுமதிக்க முடியாது என்றும் கூறியதாகத் தெரிகிறது. இதனால் பொங்கலுக்குள் (ஜனவரி 14) ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்றும் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே எடப்பாடியை அமித் ஷா சந்திக்கவில்லையாம். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரே அணிக்குள் கொண்டு வர வேண்டும்.. வாக்கு பிரிவதை விட்டுவிடக்கூடாது என்பதை உணர்த்தவே எடப்பாடியைச் சந்திக்காமல் அமித் ஷா புறப்பட்டுச் சென்றதாக வட்டாரங்கள் கூறின!

Similar News