கரூர் நெரிசலுக்கு நான் காரணமா? தெரியாமல் பேச கூடாது! நயினார் குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி ரியாக்ஷன்
கரூர் நெரிசலுக்கு நான் காரணமா? தெரியாமல் பேச கூடாது! நயினார் குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி ரியாக்ஷன்;
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி தான் முழு காரணம் என நேற்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு வைத்த நிலையில் இதற்கு செந்தில் பாலாஜி பதில் கூறியுள்ளார். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த குறுகிய மனப்பான்மையோடு பேசும் நயினார் நாகேந்திரனுக்கு பதில் சொல்லி என் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என கூறினார்.
கரூர் கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. கரூரில் என்ன நடந்தது என்பது பற்றி தெரியாமல் நயினார் பேசியுள்ளார். மக்களுக்கு தெரியும் என்ன நடந்தது என்று.. விஜய் லேட்டாக வந்தார் என்று சொன்னார். ஆனால் அவர் பற்றி முழுமையாக எதுவுமே ஏன் நயினார் பேசவில்லை என்று கூறினார்.
சென்னையில் நடந்த உலகம் உங்கள் கையில் விழாவில் பங்கேற்ற செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கரூர் நெரிசலுக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தார். செந்தில் பாலாஜி கூறியதாவது:-
விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விசாரணையில் யார் என்ன என்பது தெரியவரும். நேற்று பாஜக மேடையில் பேசிய நயினார் நாகேந்திரன் கரூர் சம்பவத்தின் போது 12 மணிக்கு வர வேண்டிய விஜய் இரவு 7 மணிக்கு வந்தார் என்று சொன்னார். இதை மட்டும் சொல்லிவிட்டு கடந்து போய்விட்டார்.
அவர் ஏன் விளக்கை அணைத்தார்.. ஏன் உள்ளே போனார்.. காவல்துறை சொன்ன இடத்தில் வாகனத்தை நிறுத்தாமல் மாற்றுப்பாதையில் உள்ளே சென்று கூட்ட நெரிசலை ஏற்படுத்தினார் என்பதை எல்லாம் பேசியிருந்தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும்.
ஆனால் அவை எல்லாவற்றையும் பேசாமல், அரசியலுக்காக, அரசு மீதும், தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக குறுகிய மனப்பான்மையோடு நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறார்.
ஒரு கட்சியின் தலைவராக, அரைகுறைத் தனமாக என்ன நடந்தது என்பது பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமல் குறுகிய மனப்பான்மையோடு சொல்லப்பட்ட கருத்து. இப்படிப்பட்ட கருத்துக்கு நான் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இங்கு இருக்கும் மக்களுக்கு தெரியும் என்ன நடந்தது என்று..
கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு என்ன நடந்தது என்ன தெரியும். அரசு எந்த அளவிற்கு செயல்பட்டது என்றும், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் ஸ்டாலின் இரவோடு இரவாக வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எந்த அளவுக்கு துணை நின்றது என்பது மக்களுக்கு தெரியும்.
அரசியலுக்காக ஒரு அர்ப்பத்தனமான கருத்துக்களை சொல்லுகின்ற சில அரசியல் தலைவர்களுக்கு பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. இன்று ஒரு நல்ல நிகழ்ச்சி நடந்து இருக்கிறது. ஒரு சிறப்பு வாய்ந்த திட்டம் மடிக்கணினி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து இருக்கிறார். இன்று ஒரு நல்ல நாள். இவ்வாறு அவர் கூறினார்.