விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு ஆவேமசாக பேசிய செங்கோட்டையன்!
விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு ஆவேமசாக பேசிய செங்கோட்டையன்!;
ஜனநாயகன் படத்தின் ரிலீஸில் தடைகள் ஏற்படுத்த முயன்றால்.. அதை ஏற்படுத்தக் கூடியவர்களுக்கே பிரச்சினையாக அமையும் என அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும், ஜனநாயகன் படத்தைப் பார்க்கத் தமிழகமே ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பிரச்சினை செய்வோருக்கு எதிராகவே நிலைமை போகும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரமாக இருக்கும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜனநாயகன். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தோடு சினிமாவுக்கு முழுக்குப் போடும் விஜய், முழு நேரமாக அரசியலில் நுழைகிறார். இதனால் இப்படத்தின் மீது பல மடங்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் தான் இந்தப் படத்தின் டிரைலர் வெளியானது. அதற்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும், இப்படத்தின் ரிலீஸ் தாமதம் ஆகலாம் எனச் சொல்லப்பட்டது. இதற்குப் பல்வேறு காரணங்களைச் சொல்லியிருந்தனர். இதற்கிடையே ஜனநாயகன் படம் தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் சில கருத்துகளைக் கூறியுள்ளார்.
இது தொடர்பாகக் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "தமிழ்நாட்டை ஆளப்போகும் தமிழக வெற்றி கழகத்துடைய தலைவருடைய திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதில் மக்கள் ஆவலாகக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. இந்த நேரத்தில் தடைகள் ஏற்படுமேயானால்.. அதை ஏற்படுத்தக் கூடியவர்களுக்கு அது வலுச் சேர்க்காது. அப்படிப்பட்ட சூழல் எங்கு ஏற்பட்டாலும் அது வேதனைக்கு ஒன்றாக இருக்கும். நாளை முதலமைச்சராக ஆகப்போகிற அவருடைய திரைப்படத்தைத் தடுப்பது என்பது சரியாக இருக்காது. அப்படி யாராவது எண்ணினால் அது அவர்களுக்குப் பாதகமாகவே முடியும்" என்றார்
தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் பிரச்சினை செய்வது யார்.. மத்திய அரசா இல்லை மாநில அரசா என்ற கேள்விக்கு அவர், "பிரச்சினை செய்வது யார் என்பது உங்களுக்கே தெரியும்.. நீங்களே புரிந்து கொள்ளலாம்" என்றார்.
பெரியாரைத் தோற்கடிப்போம் என்பது போல பாஜக விவசாய அணித் தலைவர் ஈரோட்டில் பேசியது தொடர்பான கேள்விக்கு அவர், "பொதுவாக ஒவ்வொருவரும் ஒரு கருத்துக்கள் சொல்வார்கள். பெரியார் எங்களுடைய கொள்கை தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது கருத்துக்களைப் பற்றி நாம் இப்போது விமர்சனம் செய்யத் தேவையில்லை. சரியான காலத்தில் மக்கள் அவர்களுக்கான பதிலைச் சொல்வார்கள்" என்றார்.