சென்னையில் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி

Update: 2024-09-21 10:07 GMT

சென்னையில் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி... அசத்தலான கொலு பொம்மைகள்... அழகான கைவினைப் பொருட்கள்!

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நவராத்திரியை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.




இன்று முதல் வருகிற அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களான நவராத்திரி கொலு பொம்மைகள், பட்டு, பருத்தி ஆடைகள், செயற்கை ஆபரணங்கள், கைவினைப் பொருட்கள், சணல், காகிதம், பனை ஓலை மற்றும் வாழை நார் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், மரச் சிற்பங்கள், மூலிகைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக 48 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சிக்கு நவராத்திரி பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள், அறுசுவை மிகுந்த பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்வதற்கென்றே தனி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10.00 மணி இரவு 08.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

வார இறுதி நாட்களில் பாரம்பரியம் நிறைந்த சிறப்பான கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றது முதல், சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்திட்டங்களின் பயனாக இன்று சுய உதவிக் குழுவினர் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர். சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில / மாவட்ட / வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.

அந்த வகையில், நவராத்திரிக்கான கொலு பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க நினைப்போர், இத்தகைய சிறப்பு மிக்க விற்பனைக் கண்காட்சிக்குச் சென்று வாங்கலாம். மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யும் பொருட்கள் என்பதால், அவை தரமானதாக இருப்பதோடு, விலையும் நியாயமாக இருக்கும். இதனால், வாங்குபவர்களுக்கு மட்டும் பயன் கிடைப்பது மட்டுமல்லாது, அவற்றை விற்பனை செய்யும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலும் இருக்கும்.

எனவே, நவராத்திரிக்காக ஷாப்பிங் செய்ய நினைக்கும் சென்னைவாசிகள், தயங்காமல் இந்த நவராத்திரி விற்பனைக் கண்காட்சிக்கு விசிட் அடிக்கலாம்!  

Tags:    

Similar News