சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் சாட்போட் வாட்ஸ்அப் செயலி !!!

Update: 2024-11-21 07:43 GMT

சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் சுவாமி சாட்போட் என்ற வாட்ஸ்அப் செயலியை உருவாக்கி உள்ளது என தமிழ்நாடு அரசுக்கு பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்ட நிலையில் நாள்தோறும் சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து இதுதொடர்பாக கேரள அரசின் தலைமைச் செயலாளருக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுக்கு பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால், அதனை சரிசெய்ய சுவாமி சாட்போட் என்ற வாட்ஸ்அப் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

அவசர உதவிகள் தேவைப்படும்போது, 6238008000 என்ற எண்ணுக்கு hi என குறுஞ்செய்தி அனுப்பினால், உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, காவல் துறை, தீயணைப்பு சேவைகள், மருத்துவ உதவிகள், வன அதிகாரிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான அவசர தொலைபேசி எண்ணையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஐயப்பன் கோயில் திறந்திருக்கும் நேரங்கள், பூஜை நேரங்கள், அருகிலுள்ள கோயில்கள், தங்குமிடங்கள், உணவகங்கள், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய தகவல்களையும், கேரள மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் வந்து செல்லும் நேரங்களையும் அறிந்துகொள்ள முடியும் என்று பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News