வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நாளை முதல் தரிசன டோக்கன்கள் விநியோகம்!
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவாரா தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கான வழிமுறைகளையும் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் எங்கு எப்போது வழங்கப்படும் என்ற தகவல் தேவஸ்தானம் வெளியீட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி வரும் 10ஆம் தேதி அனைத்து வைஷ்ணவ கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
இந்த வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு இந்த 10 நாட்களுக்கும் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் தவிர்க்க நேரம் குறிக்கப்பட்ட ஸ்லாட் டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். எனவே திருப்பதி மற்றும் திருமலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவுன்ட்டர்களில் டோக்கன்களை பெற்று கொள்வது கட்டயமாக்கப்பட்டுள்ளது.
ஜீவகோனா ZP உயர்நிலைப்பள்ளியில் 10 கவுன்ட்டர்களும், M.R. பல்லே ZP உயர்நிலைப் பள்ளியில் 8 கவுன்ட்டர்களும் ராமச்சந்திரா புஷ்கரணியில் 10, ராமாநாயுடு உயர்நிலைப்பள்ளி பைரகிபட்டோவில் 10, இந்திரா மைதானம் 15, ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ் 12, விஷ்ணு நிவாசம் காம்ப்ளக்ஸ் 14, பூதேவி காம்ப்ளக்ஸ் 11, பாலாஜி நகர் சமுதாயக் கூடம் (திருமலையில் வசிப்பவர்களுக்கு மட்டும்) 4 கவுன்ட்டர்களிலும் டோக்கன்கள் வழங்கப்படும்.
ஜனவரி 10, 11, 12 ஆகிய நாட்களில் தரிசனம் செய்வதற்கு மேற்கண்ட கவுன்ட்டர்களில் நாளை காலை 5 மணி முதல் எஸ்எஸ்டி (நேரம் குறிப்பிடப்பட்ட சர்வ தரிசன டோக்கன்)டோக்கன்கள் வழங்கப்படும். இந்த மூன்று நாட்களுக்கான ஒதுக்கீடு முடியும் வரை இது தொடரும். மேலும் 9ஆம் தேதி அன்று தரிசனம் செய்வதற்கான எஸ்எஸ்டி தரிசன டோக்கன்கள் வழங்கப்படமாட்டாது. முதல் 3 நாட்களுக்கான ஒதுக்கீடு முடிந்ததும் 13 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான டோக்கன்கள் வழக்கமான எஸ்எஸ்டி டோக்கன் கவுன்ட்டர்களில் மட்டும் வழங்கப்படும்.
திருமலையில் குறைந்த அளவே தங்கும் வசதி இருப்பதால் பக்தர்கள் யாரும் முன்கூட்டியே திருப்பதிக்கு வர வேண்டாம், குறிப்பிட்டு பயணத்தை மேற்கொள்ளவும், இந்த 10 நாட்களும் சாமானிய மக்களுக்கான தரிசனம் வழங்கப்படுவதால் சிபாரிசு கடிதங்கள் ஏதும் ஏற்கப்படமாட்டாது. என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.